அதிமுக – பாஜக கூட்டணி இருந்தாலும், முறிந்தாலும் திமுகதான் வெல்லும்: உதயநிதி

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி இருந்தாலும் சரி, முறிந்தாலும் சரி, திமுகவே மகத்தான வெற்றி பெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் தேவராஜ் மஹால் வளாகத்தில் இன்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

இன்றைய தினம் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. களத்தில் இறங்கி போராடி செய்து முடிப்பவர் செயல்வீரர். இங்கு உண்மையான செயல்வீரர்கள் அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட செயலாளர்கள் மதியழகன், பிரகாஷ் ஆகியோர் ஆவார்கள். இக்கூட்டத்துக்கு வந்துள்ள உங்களை பார்க்கும் போது வருகிற டிசம்பர் மாதம் சேலத்தில் நடக்க கூடிய நமது இளைஞர் அணி மாநில மாநாடு மகத்தான வெற்றியை பெறப் போவது உறுதி என்பதைக் காட்டுகிறது. இங்கு நீங்கள் அனைவரும் எழுச்சியுடன் வந்துள்ளீர்கள். அதே எழுச்சியுடன் சேலம் மாநாட்டுக்கு வந்து வெற்றி மாநாடாக மாற்றி தருவீர்கள் என நம்புகிறேன். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு உதாரணம் நமது முதல்வர். திமுகவில் எத்தனையோ அணிகள் இருந்தாலும் அதில் முதன்மையான அணியாக இளைஞர் அணி உள்ளது.

இந்தியாவிலேயே 1980-ல் ஒரு இயக்கத்துக்கு இளைஞர் அணி ஆரம்பித்தது என்றால் அது திமுகவில் தான். இந்த இயக்கத்தில் அடிப்படை உறுப்பினராக, படிபடியாக பொறுப்புகளை பெற்று சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என பல பொறுப்புகளை கடந்து தற்போது திமுக தலைவராகவும், முதல்வராக மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். தற்போது இளைஞர் அணியில் 658 பேர் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 452 பேர் ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்கள். அவர்களுக்கு பொறுப்பு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கட்சி பணியை சிறப்பாக செய்தால் அடுத்தடுத்து பதவிகளுக்கு வரலாம் என்பதற்கு இங்கு வந்துள்ள மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் பிரகாஷ், இந்த மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் போன்றவர்கள் உதாரணம் ஆகும்.

சமீபத்தில் ஒரு மாநாட்டை மதுரையில் ஒரு கட்சி நடத்தியது. ஒரு மாநாடு எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் அது. மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று நமது சேலம் இளைஞர் அணி மாநாட்டை நிரூபித்து காட்ட வேண்டும். இங்கு வந்துள்ளவர்கள் நமது திமுக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும். என்னை மாநில இளைஞர் அணி செயலாளராக நியமித்த போது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 10 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்று சொன்னார்கள். அவ்வாறு நாம் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சேர்த்துள்ளோம். அவர்களுடன் சேர்த்து சேலத்தில் நடைபெற கூடிய மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்திட வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம். தற்போது இளைஞர் அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்த போகிறோம். இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் போராட்டமாக நடத்த போகிறோம். இதை மிகப்பெரிய வெற்றி அடைய செய்ய வேண்டும்.

மத்திய பாஜக அரசு 9 ஆண்டுகள் மக்கள் விரோத ஆட்சியை தந்தார்கள். சாலை அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடி செலவு கணக்கு காட்டி உள்ளார்கள். ரமணா என்கிற சினிமாவில் இறந்த பிணத்தை வைத்து பணம் பறிப்பார்கள். திரையில் பார்த்ததை நிஜத்தில் செய்து காட்டி உள்ளார்கள். இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செய்துள்ளார்கள். அதானிக்கு அனைத்தையும் தாரை வார்த்து கொடுத்துள்ளது இந்த பாஜக அரசு. இவர்களை நாம் ஓட, ஓட விரட்ட வேண்டும்.

தற்போது ஒரு தகவலை நான் கேள்விப்பட்டேன். அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக கே.பி.முனுசாமி கூறி இருக்கிறார். 2021 தேர்தலில் நாம் அதிமுகவை விரட்டினோம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு விரட்ட வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணி வைத்தாலும் சரி, கூட்டணியை முறித்துக் கொண்டாலும் சரி எப்படியும் திமுக தான் ஜெயிக்க போகிறது. அதற்கு அச்சாரமாக சேலம் இளைஞர் அணி மாநில மாநாடு அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.