மருதமலை கோவிலுக்கு திமுக அரசு கரெண்ட் கொடுக்கலையா: அண்ணாமலை பேச்சால் சர்ச்சை!

1962 வரை மருதமலையில் கரெண்ட் கிடையாது.. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்ககூடாது என்று திமுக கொள்கையாக வைத்திருந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியிருந்தார். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததே 1967ல் தான் என்று நெட்டிசன்கள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

கோவை மாநகரில் என் மண் என் மக்கள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், கோவை மாவட்ட பாஜக பிரமுகர்கள், அமர்பிரசாத் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, அங்கிருந்த மக்களிடம் திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மருதமலை முருகன் கோவிலுக்கு திமுக ஆட்சியில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். இதனிடையே அண்ணாமலை பேசிய பேச்சு சர்ச்சையாக மாறி இருக்கிறது. 1962ல் திமுக ஆட்சிக்கே வராத நிலையில் திமுகதான் மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் தரவில்லை என்று பேசியதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 1967ல் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்றும் அதற்கு முன்பு காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

மருதமலை முருகன் கோயில் குறித்து பேசிய வீடியோவும் இணையதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அண்ணாமலை பேசுகையில், கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் தொகுதியில் இருந்து கொண்டு மருதமலை முருகனை பற்றி பேசாமல் போனால் தப்பாகிவிடும். 1962 வரை மருதமலை முருகனை பார்க்க வேண்டும் என்றால் கரெண்ட் கிடையாது.. சாதாரண படிக்கெட்டில் ஏற வேண்டும். திமுக மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக்கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தார்கள். அதை உடைத்து மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரத்தை கொடுத்தவர் யார் என்றால் சின்னப்ப தேவர் ஐயாதான்.. உங்களுக்கு சின்னப்ப தேவர் ஐயாவை தெரியும். தமிழகத்திலேயே முக்கியமான சினிமா படைப்புகளை தயாரித்தவர். அவரே போய் மருதமலைக்கு மின்சாரம் தர வேண்டும் என்று ரிஜிஸ்டர் பணத்தை கட்டி புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் மருத மலை முருகன் கோயிலுக்கு கரெண்ட் வந்தது. ஆகவே திமுக என்பது எப்போதுமே சனாதன தர்மத்திற்கும், இந்து தர்மத்திற்கும் எதிராகவே இருக்கும் என்பதற்கு இதுஒரு உதாரணம்” என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பதிலடி கொடுத்து வரும் திமுக ஆதரவாளர்கள் பலர், திமுக ஆட்சிக்கு வந்ததே 1967ல் தான் என்றும், எப்படி 1962ல் மின்சாரம் தராமல் திமுக இருந்திருக்க முடியும் என்றும் கூறி வருகிறார்கள்.