இந்தியாவின் ராஜதந்திரம் கடந்த 30 நாட்களில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி 20 பல்கலைக்கழக இணைப்பின் இறுதிப் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்தியாவின் ராஜதந்திரம் கடந்த 30 நாட்களில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் 85 உலகத் தலைவர்களைச் சந்தித்துள்ளேன். பல்வேறு திசைகளில் உலக நாடுகள் இயங்கும் இன்றைய சர்வதேச சூழலில் பல நாடுகளை ஒரே மேடையில் இணைப்பது சிறிய விஷயம் அல்ல. ஆனால், டெல்லியில் நடந்த ஜி 20 உச்சி மாநாடு அதை சாதித்தது. கடந்த 30 நாட்களின் ரிப்போர்ட் கார்டை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். அது புதிய இந்தியாவின் வேகம் மற்றும் அளவைப் பற்றிய ஒரு யோசனையை உங்களுக்குத் தரும்.
ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாள். இது உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். அன்றைய தினம் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். திடீரென்று அனைவரின் முகத்திலும் புன்னகை. ‘இந்தியா நிலவுக்குச் சென்றுவிட்டது’ என்ற இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் கேட்டது. இதன் காரணமாக ஆகஸ்ட் 23 தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிக்கப்பட்டது. நிலவு குறித்து ஆராயும் பயணத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தியா சூரியன் குறித்து ஆராயும் தனது பயணத்தைத் தொடங்கியது.
ஜி 20 மாநாடுகளை டெல்லியில் மட்டுமே நடத்தி இருக்கலாம். ஆனால், அதனை மக்கள் இயக்கமாக தேசிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதன் உச்சி மாநாடு புதுடெல்லியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுடெல்லி பிரகடணம் 100 சதவீத ஒருமித்த கருத்துடன் வெளியிடப்பட்டது. இது சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாகியது. ஜி20 மாநாட்டின் போது எடுக்கப்பட்ட சில முடிவுகள் 21ஆம் நூற்றாண்டின் திசையை மாற்றும் திறன் கொண்டவை. பிரிக்ஸ் கூட்டமைப்பில், இந்தியாவின் முயற்சியால் மேலும் ஆறு நாடுகள் இணைந்துள்ளன.
ஏழைகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கைவினைஞர்களுக்காக அரசாங்கம் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 30 நாட்களில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு ‘ரோஸ்கர் மேளா’ மூலம் மத்திய அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதா. ஜி20 உச்சிமாநாட்டின் வெற்றி எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. ஏனெனில், எந்த ஒரு நிகழ்விலும் இளைஞர்கள் கலந்து கொண்டால், அதன் வெற்றி நிச்சயம். நம்பிக்கை, வாய்ப்புகள் மற்றும் திறந்த மனப்பான்மை உள்ள இடங்களில் மட்டுமே இளைஞர்கள் முன்னேறுகிறார்கள். இளைஞர்களுக்கு எனது செய்தி – ‘பெரியதாக சிந்தியுங்கள்’ என்பதே! இவ்வாறு அவர் பேசினார்.