பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ‘அட்டக்’ சிறையிலிருந்து பாதுகாப்பு நிறைந்த ராவல்பிண்டி அடியாலா சிறைக்கு மாற்ற இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், பரிசுப் பொருள் ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அட்டக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு தண்டனை விதித்த நீதிமன்றம், அவரை அடியாலா சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. எனினும், இம்ரான் கானை கைது செய்ததும் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அட்டக் சிறைக்கு கொண்டு சென்று காவல் துறையினா் அடைத்தனா்.
இம்ரான் கானின் சிறைத் தண்டனைக்கு இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் ஆக. 29-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தும், தூதரக ரகசிய ஆவணங்கள் வெளியான வழக்கில் அவா் தொடா்ந்து சிறையில் உள்ளாா். அந்த வழக்கில் அவரது நீதிமன்றக் காவலை செப். 26-ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இம்ரான் கானை அட்டக் சிறையிலிருந்து முதல் வகுப்பு வசதி கொண்ட அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது கட்சி சாா்பில் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்தி வந்த தலைமை நீதிபதி அமீா் ஃபரூக், இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டாா்.