நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி: சீமான்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்றும் சீமான் கூறியுள்ளார்.

பாஜக கூட்டணியை முறிப்பதாக அதிமுக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த லோக்சபா தேர்தலை மற்றும் சட்டசபை தேர்தலை ஒன்றாக சந்தித்த அதிமுக – பாஜக கூட்டணி நேற்று முறிந்ததாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களுக்கு எதிராக பேசி வந்ததால், அதிமுகவின் முன்னாள் தலைவர்களை இகழ்ந்து பேசி வந்ததால் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாக அதிமுக கூறியது. அதிமுக- பாஜக கூட்டணி முறிவதற்கு அண்ணாமலை பேச்சு, அண்ணாமலையை நீக்க அதிமுக வைத்த கோரிக்கையை பாஜக ஏற்றுக்கொள்ளாதது, லோக்சபா தேர்தலில் பாஜக 20 இடங்களை கேட்டது. இவை எல்லாம் கூட்டணி உடைவதற்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்பட்டது. அதிமுக – பாஜக கூட்டணி முறிந்ததை சீமானும் வரவேற்று இருந்தார். இதனால் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க எடப்பாடி முயற்சி செய்யலாம். சீமானும் எடப்பாடியை பெரிதாக கடிந்து பேசியது இல்லை. இதையெல்லாம் வைத்து அதிமுகவுடன் நாம் தமிழர் கூட்டணி வைக்கலாம் என்று கூட சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பேச தொடங்கினர்.

இந்த நிலையில், தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். அண்ணாமலை நடைபயணம் சரிவராததால் அவர் இடை நிறுத்திவிட்டார். அண்ணாமலைக்கு தற்போது நடப்பதற்கு நேரம் இல்லை. யாரை சேர்த்து கூட்டணியை வழி சேர்க்கனும் என்ற நிலைதான் உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவை நிரந்தர முடிவாக பார்க்கிறேன்” என்றார்.

அப்போது தமிழர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பீர்களா என்று சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீமான், சிதம்பரம் இருக்கிறார் அல்லவா.. அவரை நீங்கள் தமிழராக ஏற்பீர்களா எப்படி? அதிக செல்வாக்கு பெற்ற மூப்பனாரும் சிதம்பரமும் இந்திய அமைதிப்படையை அனுப்பும் போது அதை பேசி இவர்கள் தடுத்து இருக்கலாம். தயவு செய்து செய்ய வேண்டாம் என்று.. ராஜிவ் – ஜெயவர்தனே ஒப்பந்தத்தில் தமிழ் இனம் மிகப்பெரிய பின்னடவை சந்திக்க போகிறது என்று தடுத்து இருக்கலாம். எவ்வளவோ வேலைகளை செய்து இருக்கலாம். என் இனம் சாகும் போது இந்த தலைவர்கள் மவுனம் காத்து நிற்கும் போது.. தமிழனாய் பிறப்பவன் எல்லாம் தமிழன் இல்லை.. எவன் தமிழுக்கும் தமிழருக்கும் இறுதி வரை நின்று போராடுகிறானோ அவன் தான் தமிழன். தமிழர் மீட்சியே தமிழர் எழுச்சி என்ற கோட்பாட்டை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா.. இவ்வாறு அவர் கூறினார்.

இத்தனை ஆண்டுகாலமாக நீடிக்கும் காவிரி பிரச்சனை தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கூறியதாவது:-

காவிரி எனக்கு பிரச்சனையே இல்லை.. இஸ்யூவே இல்லையே.. காவிரி பிரச்சனைக்கு நான் ஏன் அவன்கிட்ட (கர்நாடகாவிடம்) கையேந்தனும்? காவிரியில் கர்நாடகாவின் 180 டிஎம்சி, 1980 டிஎம்சி நீர்தான் இருக்கும். 2,100 டிஎம்சி நீரை நாம் கடலில் கலக்க விடுகிறோம். 5,000 ஏக்கரில் ஏர்போர்ட் கட்டுறதுக்கு பதிலாக 5,000 ஏக்கரில் ஏரியை வெட்டிட்டு போக வேண்டியதுதானுங்க.. எனக்கு என் பாட்டன் அரசேந்திர சோழன் கட்டிய வீர நாராயணன் ஏரி (வீராணம் ஏரி) இருக்குங்க.. அது சிறு கடலுங்க.. 16 கி.மீ. தூரம்.. அதை தூர்வாரி பரமாரிச்சு ஒவ்வொரு ஆண்டும் கடலூரில் பெய்யுற வெள்ள நீரை, மழை நீரை சேமிச்சுன்னா.. நேரா கால்வாய்.. அல்லது பெருங்குழாய்.. ராட்ச குழாயில் காவிரி படுகையில் கொண்டாந்து இறக்கிடுவேன். 60 வருஷமாக ஆண்டுவிட்டு அவன்கிட்ட (கர்நாடகாவிடம்) போய் கையேந்திகிட்டு.. உனக்கு இந்த பிரச்சனை தீர்க்கப்படக் கூடாது; தீர்க்கப்பட்டுவிட்டால் உனக்கு அரசியல் இல்லை. அவனுக்கு (கர்நாடகா) தமிழனுக்கு தண்ணீர் கொடுத்துட்டா அரசியல் இல்லை. அவன் (கர்நாடகா) கிட்ட இருந்த தண்ணீர் வாங்கிட்டா இவனுக்கு அரசியல் இல்லை. எனக்கு தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருக்குதுங்க.. நான் சேமிச்சு காட்டுறேன். தண்ணீர் தேவைக்காக எவன்கிட்ட கையேந்தாம, பொன்னம்பலாவில் ஒரு அணையை போட்டேன்னு வெச்சுக்குங்க.. அவனே (கேரளா) முல்லை பெரியாறு அணையில் தண்ணீரை திறந்துவிட்டுவான்.. இவ்வாறு சீமான் கூறினார்.