ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 23ஆம் தேதிக்கு நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அதிமுக ஆட்சி நடந்த 2001 – 2006 சமயத்தில் வருவாய்த் துறை அமைச்சராகவும், ஜெயலலிதா சிறை சென்றதால் சில மாதங்கள் முதலமைச்சராகவும் ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். 2006ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, ஓபிஎஸ் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டியது. ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி, மகன்கள், மகள் மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார் என தேனி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு முதலில் தேனியிலும் பிறகு மதுரையிலும் இறுதியாக சிவகங்கை நீதிமன்றத்திலும் நடைபெற்றது. 2012ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ்ஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. இதனையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது.
வழக்கு விசாரணை முடிந்து சுமார் 11 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்து அதிரடி காட்டினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 2012ல் பிறப்பித்த உத்தரவை தற்போது மறுஆய்வு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.
மேலும், இந்த விவகாரத்தில் குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி குற்றம்சாட்டினார். லஞ்ச ஒழிப்புத் துறை பச்சோந்தி போல கட்சிக்கு ஏற்றபடி தன் வண்ணத்தை மாற்றி செயல்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இவ்வழக்கில் ஓபிஎஸ், லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் ஓபிஎஸ்க்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ், அவரது குடும்பத்தினர் தரப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இதையடுத்து வழக்கின் ஆவணங்களை ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கினை வரும் நவம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.