அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும் பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: உதயநிதி ஸ்டாலின்

அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, அவர்களின் பிரிவு என்பது பிரிவு அல்ல, நாடகம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான இடம் மற்றும் முன்னேற்பாடு பணிகளை கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி என்பது பிரிவு அல்ல. அது ஒரு நடிப்பு, நாடகம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 4 பேரில், 2 பேர் கொச்சிக்கு சென்று டெல்லி விரைந்தனர். மீதமுள்ள 2 முன்னாள் அமைச்சர்கள் பெங்களூருவுக்கு சென்று டெல்லிக்கு பயணமானார்கள். எதற்கு இந்த திரை மறைவு. அ.தி.மு.க.-பா.ஜனதா தகராறு என்பது உட்கட்சி தகராறு. ஒன்றிய அரசின் சி.ஏ.ஜி. அறிக்கையின்படி, ரூ.7½ லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க ரூ.250 கோடி கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 9 ஆண்டுகால ஒன்றிய அரசின் ஊழல் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் ஒன்றிய பா.ஜனதா அரசு திசை திருப்ப முயற்சித்து வருகிறது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைய கூடாது என்று இந்திய மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

அ.தி.மு.க.-பா.ஜனதா பிளவு என்பது நடிப்பு. தேர்தல் வந்தவுடன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு வருவார்கள். அமலாக்கத்துறை வழக்கு இருக்கு, அதனால் அ.தி.மு.க.வினர் வெளியே வர மாட்டார்கள். தி.மு.க.வை மிரட்டி பார்த்தார்கள். ஆனால் அதற்கு தி.மு.க. அஞ்சவில்லை. ஊழலால் தண்டிக்கப்பட்ட ஒரே முதல்-அமைச்சர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் தான் என்று உங்களுக்கே தெரியும். அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. மக்கள் சேவை, மக்கள் பணி. மக்களுக்காக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எங்களுடைய கூட்டணியின் நோக்கம் ஆகும். தி.மு.க. கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி. 8 ஆண்டுகளாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாமர்த்தியமாக அனைவரையும் அரவணைத்து சென்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு மாநிலத்திற்கு மாநிலம் கொள்கை இருக்கும். நமது மாநில உரிமையை எந்த காலத்திலும் தி.மு.க. விட்டு கொடுக்காது. இ்வ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.