சமூகநீதி பற்றி தமிழக அரசு பேசலாமா?: ஆளுநர் ஆர்என் ரவி!

தமிழ்நாட்டில் பஞ்சாயத்து தலைவியாக பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் தேர்வான நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் அவர் பொறுப்பேற்கவில்லை. இத்தகைய சூழலில் தமிழக அரசு சமூக நீதி குறித்து எப்படி பேச முடியும்? என ஆளுநர் ஆர்என் ரவி கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக தென்காசி, விருதுநகர் மாவட்டங்களுக்கு வந்தார். நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆளுநர் ஆர்என் ரவி தென்காசி மாவட்டம் குற்றாலம் சென்று விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார். அதன்பிறகு ஆழ்வார்குறிச்சியில் பாரம்பரியமாக பானை தயாரிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசியதோடு சிவசைவம் அவ்வை ஆசிரமத்துக்கு சென்று ஆசிரம குழந்தைகள் மற்றும் பணியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதையடுத்து நெல்கட்டும் செவல் கிராமத்தில் பூலித்தேவர் அரண்மனையை பார்வையிட்டவர் ஒண்டி வீரன் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஆளுநர் ரவி, சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீரத்துடன் போராடி வீரமரணம் அடைந்த மாபெரும் வீரர் வெண்ணிக்காலாடிக்கு பச்சேரி கிராமத்தில் மலர் மரியாதை செலுத்தினார். அவரது மகத்தான பங்களிப்பு – விலைமதிப்பற்ற தியாகங்களுக்கு தேசம் எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும் என்று கூறினார்.

இதையடுத்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள விஸ்வகர்மா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி கொண்டு வந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து 18 வகையான கைவினை கலைஞர்களுடன் கலந்துரையாடி பேசினார். இந்த வேளையில் தமிழக அரசை ஆளுநர் ஆர்என் ரவி கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி பேசியதாவது:-

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் தமிழக அரசு செயல்படுத்துவதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் வீடு கட்டும் திட்டத்தில் 40% நிதி பயன்படுத்தப்படவில்லை. அதோடு மத்திய அரசின் திட்டங்களுக்கு சாயம் பூசி சில கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. மத்திய அரசு திட்டத்தில் உள்ள குறைகளை கண்டுபிடித்து பேசி வருகின்றனர். சிலர் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கின்றனர். குலக்கல்வி திட்டம் எனக்கூறி தந்தை பார்த்த தொழிலை மகன்தான் பார்க்க வேண்டும் என்று பரப்புகின்றனர். இதனால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல் மக்களுக்கு சென்றடையவில்லை.

தமிழக அரசு சமூக நீதி பற்றி பேசுகிறது. தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தை சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவராக தேர்வானார். அவர் இன்று வரை பதவியேற்கவில்லை. இதுபற்றி செய்தித்தாளில் படித்தேன். இத்தகைய சூழலில் தமிழக அரசு எப்படி சமூக நீதி பற்றி பேச முடியும்?. தாழ்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது. அரசு என்பது பின்தங்கியவர்களை பற்றி கவலைப்பட வேண்டும். மேலும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமே தவிர பிச்சனைகளை அரசியல் நோக்கோடு எதிர்கொள்ள கூடாது. இவ்வாறு ஆர்என் ரவி பேசினார்.