வலது விரலில் காயம் ஏற்பட்டால், இடது விரலில் பேண்டேஜ்: காயத்ரி ரகுராம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கை கட்டை விரல் காயத்திற்கு இடது கையில் பேண்டேஜ் போட்டுவிட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பதிவிட்டு காயத்ரி ரகுராமும் விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். முதல் கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் பாத யாத்திரை சென்ற அண்ணாமலை 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார். இதன் பிறகு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி அண்ணாமலை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து தனது 2-வது கட்ட நடைபயணத்தை தொடங்கியிருந்தார். அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். மேலும், தனது பாத யாத்திரைக்கு இடையே வேனில் நின்றபடி முக்கிய சந்திப்புகளில் கட்சியினர் மத்தியில் உரையாற்றி வருகிறார். தமிழகத்தில் ஆளும் பாஜக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இதனிடையே அண்ணாமலையின் பாத யாத்திரை கடந்த வாரம் வால்பாறை வந்தது. பாதயாத்திரையின் போது வேனில் அண்ணாமலை ஏறிய போது அவரது வலது கை கட்டை விரலில் அடிபட்டதாக தெரிகிறது. இதனால், அண்ணாமலை தனது கையை உதறிக்கொண்டே இருந்தார். இதைப்பார்த்த சுற்றியிருந்த பாஜக நிர்வாகிகளும் உடனே பேண்டேஜ் கொண்டு வர ஏற்பாடு செய்தனர். இதற்கு இடையே, அண்ணாமலை மைக்கை பிடித்து பேச ஆரம்பித்து விட்டார். அப்போது அருகே இருந்த பாஜக பொதுச்செயலாளர் முருகானந்தம் பேண்டேஜ் வாங்கி வர சொன்னார். சில நிமிடங்களில் தொண்டர்களும் பேண்டேஜ் வாங்கி வந்தனர். அண்ணாமலை தனது வலது கையால் மைக்கை பிடித்து ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்தார். உடனே அருகில் இருந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ. பி முருகானந்தம் அண்ணாமலையின் இடது கை ஆள் காட்டி விரலில் பேண்டேஜ் போட்டு விட்டார். ஒரு இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அடி பட்டது என்னமோ.. வலது கை கட்டை விரலில். ஆனால், பேண்டேஜ் இடது கை ஆள்காட்டி விரலில் போடுகிறார்களே.. என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் எப்போதும் அண்ணாமலையை விமர்சித்து வரும் காயத்ரி ரகுராமும் எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். இது குறித்து காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது:-

வலது விரலில் காயம் ஏற்பட்டால், இடது விரலில் பேண்டாய்டை வைக்கிறார். 1 அடி வெள்ளத்தில் பொது மக்கள் நடந்து செல்லும் போது அவன் படகில் சென்றான். ஆட்டை கடவுளைப் போல சொல்லி காலில் விழுந்தான், ஆனால் மாலையில் மட்டன் பிரியாணி சாப்பிடுவான். ஏக்கர் கணக்கில் நாடகம். என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, அண்ணாமலைக்கு வலது கை காயத்திற்கு இடது கையில் பேண்டேஜ் போட்டது ஏன் என்று அண்ணாமலையின் ஆதரவாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், அண்ணாமலைக்கு வலது கை இடது கை என இரண்டு பக்கமும் காயம் ஏற்பட்டதாகவும் வலது கையில் பேசிக்கொண்டு இருந்ததால் இடது கையில் பேண்டேஜ் போட்டு விட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.