‘நாட்டிலேயே மிக மோசடியான அமைப்பு இஸ்கான். இந்த அமைப்பு கோசாலையில் உள்ள பசுக்களை அடிமாடுகளாக விற்கிறது’ என பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவர் ரூ.100 கோடி கேட்டு நஷ்ட ஈடு தரக் கோரி இஸ்கான் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து இஸ்கான் கொல்கத்தாவின் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ் கூறுகையில், ”இன்று நாங்கள் மேனகா காந்தி எம்.பி.க்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். எங்களுக்கு ரூ.100 கோடி நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம். மேனகா காந்தியின் அவதூறுப் பேச்சால் உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் பக்தர்கள், ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்” என்றார்.
முன்னதாக, விலங்குகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாஜக எம்.பி. மேனகா காந்தி வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அவர், “நாட்டிலேயே மிக மோசடியான அமைப்பு இஸ்கான். இது கோசாலைகளை பராமரிக்கிறது. இதற்காக பரந்த நிலங்கள் உட்பட பல பயன்களை இந்த அமைப்பு அரசிடம் இருந்து பெற்று வருகிறது. நான் சமீபத்தில் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள கோசாலைக்கு சென்றேன். அங்கு கறவை நின்றுபோன மாடுகள் எதுவும் இல்லை. ஒரு கன்றுக்குட்டி கூட அங்கு இல்லை. எல்லாவற்றையும் விற்றுள்ளனர். இஸ்கான் அமைப்பு பசுக்களை அடிமாடுகளாக விற்கிறது. தெருக்களில் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என பாடுகின்றனர். தங்கள் வாழ்வாதாரமே பால் விற்பனையில்தான் உள்ளது என்கின்றனர். ஆனால், பசுக்களை அடிமாடுகளாக அவர்கள் விற்ற அளவுக்கு யாரும் செய்ய வில்லை” என்று கூறியிருந்தார். இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இஸ்கான் அமைப்பு, “இந்தியாவில் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் பசுக்கள் மற்றும் காளைகளை பாதுகாப்பதில் இஸ்கான் அமைப்பு முன்னணி அமைப்பாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் சேவையாற்றிய பசுக்களும், காளைகளும், மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளதுபோல் அடிமாடுகளாக விற்கப்படுவதில்லை. மேனகா காந்தி மிகவும் பிரபலமான விலங்கு நல ஆர்வலர், இஸ்கான் அமைப்பின் நல விரும்பி. அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் ஆச்சர்யமாக உள்ளது” என்றது. இந்நிலையில், தற்போது அவரிடம் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது இஸ்கான் அமைப்பு.