கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன: உயர் நீதிமன்றம்!

வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன. சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு, நாங்குநேரி பகுதிகளில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுங்கச்சவடிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை அந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை கோரி மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகாராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் 14 விபத்துகள் நடந்துள்ளன என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன. அதில் மட்டும் தான் கவனம் உள்ளது, ஆனால் சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், கயத்தாறு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற மனுவில் இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.