நாடாளுமன்றம், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மக்களவை, சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேறியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உதவும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் நேற்று வியாழக்கிழமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தாா். இந்த ஒப்புதல் மசோதா பிரதியை ஜகதீப் தன்கரிடம் இருந்து மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அவரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அந்த மசோதா சட்டமானது.
இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 27 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் இருந்தது. முன்னாள் பிரதமர்களான தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இந்த மசோதாக்கள் நிறைவேற்ற முயன்றாலும் அது நடக்கவில்லை. இந்நிலையில் தான் கடந்த 18 ம் தேதி முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடந்தது. இந்த கூட்டத்தொடரில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து கட்சியினரும் ஒருசேர ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 20ம் தேதி இந்த மசோதா மக்களவையில்(லோக்சபா) நிறைவேறியது. அதேபோல் மறுநாளான 21ம் தேதி மாநிலங்களவையில் (ராஜ்யசபா) நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து இது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுக்கால போராட்டத்துக்கு பிறகு நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுடன் சட்டமாகி உள்ளது.