புகுஷிமா அணு உலையில் கழிவுநீர் 2-வது கட்டமாக வெளியேற்றம்!

ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் இருந்து 2 -வது கட்டமாக அணு கழிவுநீரை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

புகுஷிமா அணு மின் நிலையத்தில் அணு கழிவுநீரை தேக்கி வைக்க அதிக கலன்கள் தேவைப்படுவதால் இதனை சுத்திகரித்து கடலில் வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவு செய்தது. ஆனால் தென்கொரியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பலத்த எதிர்ப்பையும் மீறி முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் இறுதியில் அணு கழிவுநீரை பசுபிக் கடலில் ஜப்பான் அரசு வெளியேற்றியது. தற்போது 2-வது கட்டமாக வெளியேற்றும் பணியை அந்நாடு தொடங்கியுள்ளது.

ஜப்பானின் புகுஷிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கர நிலநடுக்கமும் அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. புகுஷிமாவில் உள்ள பயிற்சி அணுமின் நிலையத்திற்குள் கடல்நீர் புகுந்ததில் உலையை குளிர்விக்க பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்கள் பழுதடைந்தன. இதனால் அணு உலையே வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பல லட்சம் லிட்டர் கடல்நீரை அணு உலைகளுக்குள் செலுத்தி குளிர்வித்த ஜப்பான் அரசு புகுஷிமா அணு உலையை நிரந்தரமாக மூடியது. இந்நிலையில், அணு உலைகளுக்குள் செலுத்தப்பட்ட தண்ணீர் 500 குளங்கள் அளவுக்கு தேக்கி வைக்கப்பட்டது. அணு கழிவுநீரை எந்த அளவுக்கு சுத்திகரித்தாலும் அதில் உள்ள டிட்ரியத்தை பிரிக்கவே முடியாது என்பது சீனாவின் கருத்தாகும். இதனாலேயே ஜப்பானிடம் இருந்து கடல்சார் உணவு இறக்குமதியை சீனா முற்றாக நிறுத்திவிட்டது.