ஆப்கானிஸ்தானில் நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளதாக தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாயின், அல்ஜசீரா செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த தகவலின்படி, “ஹெராட் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியும், மீட்பு பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளன” என்றார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு மற்றும் மருத்துவ தேவை இருப்பதாகவும் நிதி உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், அப்துல் வாஹித் ராயன், பேசுகையில், “2060 பேர் இறந்துள்ளனர். 1,240 பேர் படுகாயமடைந்துள்ளனர். 1,320 பேரின் வீடுகள் முழுவதுமாக தரைமட்டமாகியுள்ளன” என்றார்.
ஆப்கானிஸ்தானில் ஹெராட் என்ற பகுதியின் வடமேற்கில் 40 கி.மீ தூரத்தில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3-க பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் கிராமப்புற வீடுகள் இடிந்து விழுந்தன. நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்து சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியின் போது சடலங்கள் குவிந்து கிடக்கின்றன.
ராணுவம் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் தரப்பிலிருந்து மருத்துவர்கள் அடங்கிய 4 ஆம்புலன்ஸ்களை உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. மூன்று நடமாடும் சுகாதாரக் குழுக்கள் ஜெண்டா ஜன் மாவட்டத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளன.
ஜெண்டா ஜென் (Zenda Jan) நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மிக மோசமான மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் உள்ள உலக சுகாதார அமைப்பு பிரிவு, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்காக 12 ஆம்புலன்ஸ்களை அங்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கும் ஏற்பட்ட ஹெராட் பகுதியில் 80 நோயாளிகள் வரை சிகிச்சை பெறும் 5 மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைப்பெறும் நிலையில், பலி எண்ணிக்கை உயர்வு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.