காசா மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசிய இஸ்ரேல் ராணுவம்!

காசா மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் முதலில் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடங்கி ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரேல் தரப்பில் உக்கிரமான பதிலடி கொடுக்கப்படுகிறது. காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் கைப்பற்றிய பகுதிகளை இஸ்ரேல் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அத்துடன், காசா மீது தொடர்ந்து வான் தாக்குதலை நடத்துகிறது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நான்காவது நாளாக நேற்றும் சண்டை நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக கூறி பாலஸ்தீனர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நெருப்பு மழை பொழிவது போன்று தெரிகிறது. ஆனால், இந்த வீடியோ உண்மையில் காசாவில் பதிவு செய்யப்பட்டதா? சமீபத்திய வீடியோவா? என்பது குறித்த முழுமையான தகவல் இல்லை.

வெள்ளை பாஸ்பரஸ் என்பது விரைவில் தீப்பற்றி எரியக்கூடிய ரசாயனமாகும். இது காற்றில் வெளிப்படும் போது விரைவாகவும் பிரகாசமாகவும் எரிகிறது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் ராணுவங்கள், எதிரிகளின் இலக்கை அழித்து சேதப்படுத்துவதற்கான நெருப்பு ஆயுதமாக வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துகின்றன. இந்த ரசாயனம் தீப்பற்றும்போது அதிக வெப்பத்தை (சுமார் 815 டிகிரி செல்சியஸ்), ஏற்படுத்துவதுடன் அடர்த்தியான வெள்ளை நிற புகையை வெளியிடுகிறது. பதற்றமான பகுதிகளில் எதிரிகளை நிலைகுலையச் செய்வதற்கான புகை மண்டலத்தை உருவாக்க இந்த ரசாயனத்தை ராணுவங்கள் பயன்படுத்துகின்றன.

வெள்ளை பாஸ்பரசை ஒருமுறை பற்ற வைத்துவிட்டால் அதை அணைப்பது மிகவும் கடினம். தீப்பற்றிய இந்த ரசாயனம் மனிதர்களின் தோல் மற்றும் ஆடை உட்பட பல பகுதிகளில் ஒட்டிக்கொண்டால் அவ்வளவுதான். திசு மற்றும் எலும்பில் ஆழமாக ஊடுருவி கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்தும். பொதுமக்கள் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த வகை குண்டுகளை, சமீபத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதலை தொடர்ந்தால் பிணைக் கைதிகளை கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் அமைப்பு மிரட்டியிருக்கிறது.

மக்கள் தொகை அதிகம் உள்ள காசா மீது தொடர்ந்து வான்வெளி தாக்குதல் நடத்தி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் 7ம் தேதி எல்லையை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தியபோது, எல்லையோர பகுதிகளில் இருந்து பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். குழந்தைகள் உள்பட சுமார் 150 பேர் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி உள்ளனர்.

இப்போது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், பிணைக் கைதிகளை கொன்றுவிடுவதாக ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் காசாவில் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒரு பிணைக் கைதியை கொல்வோம் என கூறி உள்ளனர். இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்திய சமயத்தில் காசா பகுதியில் ஏற்கனவே 4 பிணைக் கைதிகள் இறந்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலியர்களா அல்லது பிற நாடுகளைச் சேர்ந்தவர்களா? என்ற விவரம் வெளியாகவில்லை.

ஹமாசின் தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுத்து வரும் இஸ்ரேல், அடுத்து தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது. இதற்காக மூன்று லட்சம் வீரர்களை களமிறக்க உள்ளது. இந்த சூழ்நிலையில் பிணைக்கைதிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் இஸ்ரேல் அரசுக்கு பிரச்சினையாக உள்ளது.

பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை நடத்துவதில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகளும் முழு ஆதரவை அளித்துள்ளன. எனினும், பிணைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை மீட்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கவில்லை என்றால், மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இஸ்ரேலிய மக்கள் தங்கள் பிரதமரை மன்னிக்க மாட்டார்கள் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். ‘மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டீர்கள், பிணைக்கைதிகளை மீட்டு கொண்டு வாருங்கள்’ என்பதே மக்களின் அணுகுமுறையாக இருக்கும்.