ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் இன்று பேசியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக, காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. கப்பல்களையும் அனுப்பி வருகிறது.
இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிளிங்கனுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பு உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அழித்தது போன்று ஹமாஸ் அமைப்பும் விரைவில் வீழ்த்தப்படும். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை நடத்தியது போன்றே ஹமாஸ் அமைப்பையும் நடத்த வேண்டும். நாடுகளின் சமூகத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். அவர்களை எந்த தலைவரும் சந்திக்க கூடாது. எந்த நாடும் அவர்களுக்கு புகலிடம் அளிக்க கூடாது. அப்படி புகலிடம் அளிப்பவர்கள் மீது தடை விதிக்க வேண்டும் என பேசியுள்ளார். ஹமாஸ் ஒரு தெளிவான தீங்கு ஏற்படுத்தும் அமைப்பு என அதிபர் பைடன் கூறிய விசயங்களை மீண்டும் நெதன்யாகு உறுதிப்படுத்தி உள்ளார்.
பாலஸ்தீனர்கள் தங்களது தாய்நிலத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு இறுதி முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்துடன் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் மீது உலகம் எதிர்பாராத பெருந்தாக்குதலை நடத்தியது. ஹமாஸ் ஜிஹாதிகள் நடத்திய இந்த தாக்குதலால் இஸ்ரேல் நிலை குலைந்தது. இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் காசா, மேற்கு கரை பகுதிகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் புதைக்கும் வகையில் உலகம் தடை செய்த ரசாயன கொத்து குண்டுகளை கொட்டிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் குண்டுமழை மூர்க்கத்தை கண்டு உலகம் வாயடைத்து போய் நிற்கிறது.
இதனிடையே ஹமாஸ் தாக்குதலில் அமெரிக்கர்கள் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர்; ஹமாஸ் ஜிஹாதிகள் பிடியில் பிணைக் கைதிகளாகவும் உள்ளனர். இதனால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இத்தனைக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை, தாம் பதவியேற்ற பின்னர் ஒருமுறை கூட வெள்ளை மாளிக்கைக்கு அழைக்காமல்தான் இருந்தார் அமெரிக்கா அதிபர் ஜோ பிடன். இப்போது அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்நாடும் நேரடியாக களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா வெளியுறவுத் துறை செயலாளர்/ அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டணி பிளிங்கன் வருகை தந்தார். இஸ்ரேல் பிரதம பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, இஸ்ரேலுக்கு உறுதுணையா நாங்கள் நிற்கிறோம் என பிளிங்கன் கூறியிருந்தார்.
அத்துடன் இல்லாமல், தாம் ஒரு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக மட்டும் இங்கு வரவில்லை. பிறப்பால் ஒரு யூதனாக ஓடி வந்திருக்கிறேன் எனவும் பிளிங்கன், நெதன்யாகுவிடம் கூறியதுதான் இப்போது பெரும் விவாதமாகி உள்ளது. இஸ்ரேலியர்கள் யூதர்கள், ஜெர்மனில் ஹிட்லரால் இனப்படுகொலைக்குள்ளானவர்கள். அப்போது நாடற்றுப் போய் பாலஸ்தீனத்தின் ஒரு மூலையில் குடியேற்றப்பட்டு இஸ்ரேல் எனும் ஒரு நாடு உருவாக்கித் தரப்பட்டது. ஆனால் இன்று அந்த இஸ்ரேலிய யூதர்கள்தான் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையும் கபளீகரம் செய்து கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்கிறது.
உலகம் முழுவதும் யூதர்கள் பரவி இருக்கின்றனர். அமெரிக்காவின் அரசியலிலும் யூதர்கள் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா எப்போதும் இஸ்ரேல் பக்கம்தான் நிற்கும். அதனாலேயே அமெரிக்காவின் கோரமுகம் இஸ்ரேல் என அழைப்பதும் உண்டு. தற்போதும் ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அத்தனை யூத பிரதிநிதிகளை வரிசையாக அழைத்து அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தி ஆறுதல் கூறி வருகிறார். யூதர்கள் பின்பற்றக் கூடிய ஜியோனிசக் கொள்கையை தாம் ஆதரிப்பதாகவும் தாம் ஒரு கிறிஸ்தவ ஜியோனிஸ்ட் என யூதர்களிடம் பைடன் பேசுவதும் உண்டு என்கின்றன சர்வதேச ஊடகங்கள். இப்போது அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன், பகிரங்கமாக நான் ஒரு யூதன் என தன்னுடைய யூத பூர்வோத்திரத்தை பெருமிதத்துடன் விளக்கிக் கொண்டிருப்பதுதான் விவாதமாகி இருக்கிறது.