உலகின் விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1896-ஆம் ஆண்டு முதன்முதலாக கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. அடுத்த தொடரான 1900-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கிரிக்கெட் விளையாட்டு நீக்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டை மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து கொண்டே இருந்தது. அதன் விளைவாக, தற்போது கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2028-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலில் கிரிக்கெட் மட்டுமின்றி பிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் இருந்தன. இந்நிலையில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.