காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு படைகள் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. இன்றுடன் 11வது நாளாக போர் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த காசா நகரையும் கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் தாக்குகிறது. தற்போது வரை இருதரப்பையும் சேர்த்து 3 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 10,888க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற தலைவரான அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் இஸ்ரேல் போர் குற்றங்கள் செய்தால் முஸ்லிம்களையும், இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு படைகளையும் யாராலும் தடுத்து கட்டுப்படுத்த முடியாது என அவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளதாவது:-
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் குற்றங்கள் தொடர்ந்தால் முஸ்லிம்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு சக்திகளை யாராலும் எதிர்கொள்ள முடியாத சூழல் ஏற்படும். இதனால் காசா மீதான குண்டுவீச்சு சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் செய்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரான் என்பது 1979 காலக்கட்டத்தில் இருந்தே பாலஸ்தீனத்துக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும் ஹமாஸ் அமைப்புக்கு நிதியுதவியும், ஆயுத சப்ளையும் வழங்கி வருகிறது. தற்போதும் கூட ஹமாஸ்-இஸ்ரேல் உடனான யுத்தத்தில் தொடர்ந்து ஈரான் ஹமாஸ் அமைப்பின் பக்கமே இருந்து வருகிறது. அதேபோல் லெபனான் நாட்டில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுத குழுவும் இஸ்ரேலுக்கு எதிராக போரிட தயாராகி வருகிறது. இதனால் மோதல் வலுக்கும் சூழல் உருவாகி உள்ளது.