சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார்!

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

லீ கெகியாங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். கட்சியில் செல்வாக்கு நிறைந்த அவரை சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் பதவியேற்ற பின்னர் ஓரங்கட்டத் தொடங்கினார். இதனால் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகியிருக்க நேர்ந்தது. பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஷாங்காய் நகரில் வசித்துவந்த அவர் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் பிறந்த லீ கெகியாங் இளமையில் வறுமையில் உழன்றார். சீன கலாசார புரட்சிக் காலத்தில் அவர் தனது தந்தையுடன் விவசாய நிலங்களில் பாடுபட்டுக் கொண்டிருந்தார். தந்தை விவசாயம் தாண்டி அரசு வேலையும் செய்தார். இருப்பினும் வருமானம் போதாமல் வறுமையில் இருந்துள்ளனர். இந்தச் சூழலிலும் கெகியாங் கல்வியிலும் தேர்ந்தார். பின்னாளில் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். பொருளாதாரத்தில் தேர்ந்த அவர் தாராளமயமக் கொள்கையின் ஆதரவாளர். ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் நெருக்கடிகள் காரணமாக அவரது கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டியிருந்தது.

லீ கெகியாங் கடைசியாகக் கடந்த மார்ச் மாதம் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசும்போது, “சர்வதேச சூழல் என்னவாக இருந்தாலும் சீனா எந்தத் தடைகளையும் சமாளித்து தனது பொருளாதாரத்தை விஸ்தரிக்கும். மஞ்சள் நதி என்றைக்கும் பின்னோக்கிப் பாயாது” என்று கூறியிருந்தார்.