ஹமாஸ் குழு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடை இது. ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துகளையும், ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதமாக இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற போராளிக் குழுக்களை ஈரான் ஆதரிக்கிறது என்பது அமெரிக்காவின் நீண்ட காலக் குற்றச்சாட்டு. அதன்படி, இந்தக் குழுக்களுக்கு ஈரான் நிதியுதவி அளிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் ஹமாஸ் மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
இதனிடையே, காசா நகரின் புறநகர் பகுதியான ஷிஜாயாவில் உள்ள ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தியதுடன், பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. நேற்று காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏவுகணை ஒன்று தாக்கியதில் மூன்று பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த ஏவுகணை தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது. காசா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. அரைமணி நேரத்தில் பல ஏவுகணைகள் வீசப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரம், டெல் அவிவ் நோக்கி ஏவப்பட்ட மற்ற எட்டு ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்ததாக அந்நாட்டின் சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.