வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி 1 லட்சம் பேர் பேரணி!

வங்கதேச தலைநகர் தாகாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், பிரதம அமைச்சர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேச தேசிய கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கதேசத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் நேர்மையான சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்தப்பட, ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

வங்கதேச நாட்டினை உருவாக்கிய தலைவரின் மகளான ஷேக் ஹசீனா, 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளார். விரைவான பொருளாதார வளர்ச்சியும் இந்தியாவை விட அதிகமான உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை எட்டிய போதும் அந்நாட்டில் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்காகவும் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்காகவும் பிரதமரை பதவி விலக கோரி வருகின்றன எதிர்க்கட்சிகள்.

பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கழகத்தின் தலைவர் கலிதா ஜியா, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசைக் கலைக்க கோரி கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.
வன்முறையைத் தடுக்க 10000-க்கும் அதிகமான காவலர்கள் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் காக்ரயில் என்ற பகுதியில் மோதல் ஏற்பட்டுள்ளது. கண்ணீர் புகை கூண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் கொண்டு போரட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். சில காவலர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். வங்கதேசத்தில் அரசியல் குழப்ப நிலை வெடித்துள்ளது.