ஹமாஸ் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட ஜெர்மனி பெண் ஷானி லவுக் (22) உயிரோடு இல்லை. அவரது மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் ரைம் பகுதியில் சூப்பர்நோவா இசை விழா நடைபெற்றது. அப்போது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இசை விழாவில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் இசை விழாவில் பங்கேற்ற 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் கடத்திச் செல்லப்பட்டனர். சூப்பர்நோவா இசை விழாவில் ஜெர்மனியை சேர்ந்த ஷானி லவுக் கலந்து கொண்டார். ஹமாஸ் தீவிரவாதிகள் அவரை கொடூரமாக தாக்கினர். பின்னர் அவரது ஆடைகளைக் களைந்து ஜீப்பின் பின்பகுதியில் வைத்து தெரு தெருவாக ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஷானி லவுக்கின் தாய் ரிகார்டா சமூக வலைதளங்கள் வாயிலாக உருக்கமான வேண்டுகோளை விடுத்தார். அதில் தனது மகளை விடுவிக்குமாறு பாலஸ்தீன மக்களிடம் அவர் மன்றாடினார். இதைத் தொடர்ந்து பாலஸ்தீனம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், காசாவில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் ஷானி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தகவல் பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அண்மையில் மண்டை ஓடு ஒன்றை கண்டெடுத்தனர். அதனை மரபணு பரிசோதனை செய்தபோது அது ஷானியின் மண்டை ஓடு என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஷானி லவுக் உயிரோடு இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலை ஷானியின் உறவினர்களும் உறுதி செய்துள்ளனர்.
ஷானி லவுக்கின் தாய் ரிகார்டா கூறும்போது, “எனது மகள் ஷானி உயிரிழந்துவிட் டதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இது மிகவும் துயரமான செய்தி. அவளது இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.