போரில் காயமடைந்தவர்கள் எகிப்தில் சிகிச்சை பெறும்விதமாக ரஃபா எல்லை முதல்முறையாக திறப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு ரஃபா எல்லை முதல்முறையாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் காயமடைந்தவர்கள் எகிப்தில் சிகிச்சை பெறும்விதமாக ரஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளது.

காசா – எகிப்து எல்லையான ரஃபா கிராசிங் பார்டர், போரில் காயமடைந்தவர்கள் எகிப்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்விதமாக திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு ரஃபா எல்லை முதல் முறையாக திறக்கப்படுவது இப்போதே. அதன்படி, போரில் காயமடைந்த பாலஸ்தீனியர்கள் தவிர 500 வெளிநாட்டினர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியர்களும் ரஃபா பார்டர் வழியாக எல்லையை கடந்து வருகின்றனர்.

காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர் என்பதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிசெய்துள்ளது. காசாவில் தரைவழித் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் ராணுவம் சந்தித்த மிகப் பெரிய எண்ணிக்கையிலான இழப்பு இதுவாகும். இதன்மூலம் அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 320-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. காசா மீது தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேலுக்கு எதிராக கஸ்ஸாம் படை மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் கடும் எதிர்தாக்குதலை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காசா மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி, இஸ்ரேல் உடனான உறவை பொலிவியா அரசு துண்டித்துள்ளது. காசாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டித்துள்ள பொலிவியா உனடியாக போர் நிறுத்தம் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. போர் நிறுத்தப்படும் வரை இஸ்ரேல் உடன் எந்த உறவும் இருக்காது எனவும் பொலிவியா அரசு அறிவித்துள்ளது. இதேபோல், காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கொலம்பியா மற்றும் சிலியும் இஸ்ரேல் நாட்டுக்கான தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, “இஸ்ரேல் உடனான தூதரக உறவுகளை துண்டிக்கும் பொலிவியாவின் முடிவு, தீவிரவாதத்துக்கு முன் சரணடைவது போல் ஆகும். இந்த நடவடிக்கையின் மூலம், பொலிவிய அரசாங்கம் ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் தன்னை இணைத்துகொள்கிறது” என்று இஸ்ரேல் அரசின் செய்தித் தொடர்பாளர் லயர் ஹையாட் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் காசாவில் கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது முறையாக தகவல் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன என்று பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனமான பால்டெல் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனம் (பால்டெல்) தனது எக்ஸ் தளத்தில், “காசாவில் தகவல் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதை மக்களுக்கு அறிவிப்பதில் வருந்துகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறையாக மீண்டும் இதுமாதிரி நடப்பதாக அப்பகுதியில் உள்ள மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பல மணி நேரங்கள் ஆகியுள்ள நிலையில், இத்தையாக செயல்களால் தங்களின் பணி கடுமையாக பாதிக்கப்படுவதாக மனிதாபிமான உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இதற்கிடையே அரசு சார்பற்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி, அக்.10 முதல் அக்.16 வரையிலான லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்பட்டதாக புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்ந்து நடந்து வந்த தாக்குதலில் இஸ்ரேல், இந்த சர்ச்சைக்குரிய வெடிமருந்தைப் பயன்படுத்தியதாக அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

1983 மாநாட்டில் சர்வதேச மனித உரிமை சட்டங்களால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் வெடிமருந்துகளை இஸ்ரேல் மக்கள் குடியிருப்பு மீதும் போர் அல்லாத களத்திலும் பயன்படுத்தியதை ஆதாரங்களோடு முன்வைத்துள்ல அம்னெஸ்டி, இதனை போர்க் குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளது.

அம்னெஸ்டியின் துணை வட்டார இயக்குனர் அயா மஜூப் பேசும் போது, “இது பயங்கரமான செயலையும் தாண்டியது. சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளது. லெபனான் எல்லை நகரமான தைராவில் அக்.16 நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் வீடுகளும் கார்களும் எரிந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை பாஸ்பரஸ் என்பது எளிதில் தீப்பற்றக் கூடிய உலோகம், கையெறிகுண்டுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும். காற்றில் வீசப்படும் போது எரிந்து அதீத வெம்மையோடு இலக்கைத் தாக்கும். கடுமையான புகையை ஏற்படுத்தும் பாஸ்பரஸ் பட்டாலோ சுவாசித்தாலோ மக்களுக்கு நுரையீரல் சீர்கேடு ஏற்படுவதோடு உறுப்பு செயலிழப்பு, கடுமையான காயங்கள், சிகிச்சை அளிக்க இயலாத தீப்புண்கள் ஆகியவை ஏற்படக்கூடும். உடலின் 10 சதவீத பகுதியில் இந்த வெடிமருந்து பட்டாலே அபாயகரமான விளைவு ஏற்படும்.

40 ஆயிரத்திற்கும் அதிகமான ஆலிவ் மரங்கள் இதனால் எரிந்திருக்கின்றன. லெபனான் அரசு, ஐ.நாவில் இது குறித்து போர் குற்றதிற்கான புகாரை இஸ்ரேல் மீது அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் லெபனானின் வேளாண் துறை அமைச்சர் அப்பாஸ் அல் ஹஜ் ஹசான். இஸ்ரேல் இந்த வெடிமருந்தைப் பயன்படுத்துவது இது முதன்முறையல்ல. இந்தப் போரில் பல முறை பயன்படுத்தியதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.