109 ஆண்டு கால பாரம்பரிய பாம்பன் ரயில் பாலம் மூடப்பட்டது!

109 ஆண்டு கால பாரம்பரிய பாம்பன் தூக்கு பாலத்தின் சேவை முடிவுக்கு வந்தது. இதனால் மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தை கட்டுவதற்கான பணிகள் 1913-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. பாம்பன் ரயில் பாலத்தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முதன் முதலாக ரயில் போக்குவரத்து தொடங்கியது. இது 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை ராமேஸ்வரம் தீவுக்கும் மண்டபத்துக்கும் தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது.

கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயிலில் செல்வது ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். பாம்பன் தூக்கு பாலம் வழியாக 200 டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர் கப்பல்கள் சென்று வந்தன. 109 ஆண்டுகள் கடந்த இந்த பாம்பன் ரயில் பாலத்தில், கடந்த 11 மாதங்களாக பழுது காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ராமேசுவரம் வர வேண்டிய அனைத்து ரயில்களும், மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன. இதனால் உள்ளூர் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனிடையே பாம்பன் ரயில் பாலத்தையொட்டி 2.05 கி.மீ தூரத்துக்கு நவீன புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் கடந்த 2019 முதல் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் புதிய பாலத்திற்கு முதலில் இந்தாண்டு மார்ச் மாதம் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் அது ஜூலை வரை நீட்டிக்கப்பட்டது. நவம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க ரயில்வே அதிகாரிகள் முயற்சி செய்தனர். ஆனால், இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை. இதனால் இந்த பாலம் அடுத்தாண்டு திறக்கப்படவே வாய்ப்புகள் அதிகமுள்ளன.

இதற்கிடையே பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் முடியும் வரை தூக்கு பாலம் திறக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக பழைய பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டு உள்ளது. பாம்பன் பழைய தூக்கு பாலம் திறப்பது இன்றே கடைசி என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 109 ஆண்டு கால சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.