இந்தியர்களுக்கு என்டரி விசா தேவையை டிசம்பர் 1 முதல் மலேசியா அரசு ரத்து!

கோடை காலம் துவங்கும் முன்பே வருடத்தின் இறுதியில் வரும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முயற்யில் பல தென்கிழக்கு ஆசிய நாடுகள் விசா வழங்குவதில் அதிகப்படியான தளர்வுகளை அளித்து வருகிறது. ஏற்கனவே வியட்நாம், இலங்கை போன்ற பல நாடுகள் இந்தியர்களுக்கு சிறப்பு உரிமை கொடுத்து இலவசமாக அனுமதி அளிக்கும் வேளையில், தற்போது இந்த பட்டியலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவும் இணைந்துள்ளது.

இதன் படி மலேசியாவிற்கு வரும் இந்திய குடிமக்கள் பொதுவாக என்டரி விசா எடுக்க வேண்டும், இதற்காக சில பல ஆயிரங்களை செலவு செய்ய வேண்டும். இந்த நிலையில் இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையாக என்டரி விசா தேவையை டிசம்பர் 1 முதல் மலேசியா அரசு ரத்து செய்யும் என்று அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயாவில் நடந்த மக்கள் நீதிக் கட்சியின் வருடாந்திர மாநாட்டில் இந்திய குடிமக்கள் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மலேசியாவில் சுமார் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம் என்று அந்நாட்டு பிரதமர் அன்வார் கூறினார். இதேவேளையில் இந்திய குடிமக்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவதில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

இந்தியர்களுக்கு இதுவரையில் மலேசிய அரசு விசா ஆன் அரைவல் என்ற சேவையின் கீழ், மலேசிய மண்ணிற்கு வந்து விமான நிலையத்தில் விசா வாங்கி அந்நாட்டிற்குள் செல்லும் வசதி. இதன் மூலம் பயணத்திற்கு முன்பே விசா வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. இப்படி ஆன் அரைவல் விசா வாங்க இந்தியர்கள் சுமார் 200 ரிங்கட் அதாவது 3558 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் தற்போது இந்தியர்களோடு, சீன நாட்டவர்களுக்கும் மலேசியா டிசம்பர் 1 ஆம் தேதி முதல் விசா இல்லாமல் அந்நாட்டிற்குள் நுழையலாம் என தெரிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராகிம். இந்த அறிவிப்பு மூலம் மலேசியா அரசு அதிகப்படியான சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.