நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக தருவதாகவும், மாதத்திற்கு 12 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் வெளியான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை நம்பி ஏராளமானோர் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்த நிலையில் முறையாக பணத்தை திருப்பி தரவில்லை முதலீட்டாளர்கள் போர்க்கொடி தூக்கினர். காவல் நிலையங்களில் புகார்கள் பறந்தன. ரூ.5 ஆயிரம் கோடி வரை நியோமேக்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின்பேரில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் வீரசக்தி, பாலசுப்பிரமணியன், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வீரசக்தி என்பவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர். தேர்தலுக்கு பிறகு அவர் பாஜகவில் இணைந்து இருக்கிறார். நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கிளை 17 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், சொகுசுக் கார்கள், தங்கம், முக்கிய ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது நியோமேக்ஸ் வழக்கில் தமிழ்நாடு முழுவதும் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் தீவிர விசாரணையில் 92 பேருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான கமலக்கண்ணன், அவரது சகோதரரும் நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களில் ஒருவருமான சிங்காரவேலன், நடேஷ் பாபு மற்றும் மைக்கேல் செல்வி உள்ளிட்ட இயக்குனர்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.
பாஜக பிரமுகரும் நியோமேக்ஸ் நிறுவனர்களான வீரசக்தி, பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இவர்களை கைது செய்ய தனிப்படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் திருச்சியில் நியோமேக்ஸ் தலைமை இயக்குனரும் பாஜக பிரமுகருமான வீரசக்தி, நியோமேக்ஸ் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியத்தின் மகளும் இயக்குனருமான லாவண்யா ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதேபோல் மதுரை நீதிமன்றத்தில் சரணடைய சென்ற நியோமேக்ஸ் நிறுவன துணைத்தலைவர் பாலசுப்பிரமணியத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து நேற்று கைது செய்துள்ளனர். நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட அடுத்தடுத்து 3 பேர் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.