“கட்சிக்கு துரோகம் பண்ணியதால் இன்றைக்கு கட்சி வேட்டியை கூட ஓபிஎஸ்ஸால் கட்ட முடியவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கப்பட்டதையும், கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானங்களை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பான விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்-இன் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் வாய்தா மேல் வாய்தா வாங்குவது தொடர்பாக அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து ஜெயக்குமார் கூறியதாவது:-
சரக்கு இருந்தால் அவிழ்த்துவிடு.. இல்லாவிட்டால் ஓடி விடுனு பழைய பாடல்களில் சொல்லுவார்கள். அப்படி ஒரு சரக்கும் இல்லாதவர் தான் ஓபிஎஸ். வேண்டுமென்றே எதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் இதுபோல் செய்து கொண்டிருக்கிறார். குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்று ஓபிஎஸ் நினைத்தால், அது அதிமுகவிடம் நடக்காது. அவர் இலவு காத்த கிளியை போல காத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். அவர் எத்தனை நீதிமன்றத்துக்கு போனாலும், எங்கள் பக்கமே நியாயம் இருக்கிறது என்பதால் நாங்கள் தான் வெல்வோம். உயர் நீதிமன்றத்தில் போன வழக்கிலேயே குட்டு வாங்கினாரு ஓபிஎஸ்.
எப்படி இருந்த ஆளு இன்னைக்கு இப்படி வாய்தா வாய்தாவா வாங்க கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்காரு. காரணம் என்ன.. தலைமைக் கழகத்தை குண்டர்களுடன் வந்து அடிச்சு நொறுக்குனாரு. கட்சிக்கு தொடர்ச்சியாக துரோகம் பண்ணிட்டு வந்தாரு. இப்படி துரோகம் பண்ணியதால் இன்றைக்கு கட்சி வேட்டியை கூட கட்ட முடியாம அவரு இருக்காரு. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.