விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை என்றும் அவருக்கு 14 நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மார்பு, சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 14 நாட்களுக்கு அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்கிறார்கள்.