உலக பருவநிலை மாநாடு: பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

சர்வதேச அளவில் பெட்ரோலிய எரிபொருட்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்து வருகிறது. உலக வெப்பம் அடைவதால், காலநிலை மாற்றம், வரலாறு காணாத வறட்சி, பெருவெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் அழிவுகள் அதிகரிகத்து வருகின்றன. உலகம் வெப்பம் அடைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இதனை அடிப்படையாக கொண்டு ஐக்கிய நாடுகள் பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு பிரேசிலில் பருவநிலை தொடர்பான முதல் உச்சி மாநாடு நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பருவ நிலை உச்சி மாநாடு எகிப்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், சி.ஓ.பி 28 எனப்படும் ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடு நாளை தொடங்கி டிசம்பர் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் பங்கேற்று விட்டு நாளை மாலை இந்தியாவுக்கு திரும்புவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பருவநிலை செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரை நிகழ்த்த உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்பது மட்டும் இன்றி மூன்று உயர்மட்ட கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் புறப்படும் முன்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “பருவ நிலை விவகாரத்தில் இந்தியா எப்போதுமே சொன்னபடியே நடந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன், காடு வளர்ப்பு ஆகிய துறைகளில் நமது சாதனைகள் நமது பூமித்தாயின் மீதான அர்ப்பணிக்கு சான்று ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளர்.