தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோ மாற்றம்: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுளான ‘தன்வந்திரியின்’ படம் வைக்கப்பட்டிருப்பது புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

ஒரு வாரத்திற்கு முன்னர் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ தகுதித் தேர்வு தொடர்பாக முக்கியமான அறிவிப்பை மருத்துவ ஆணையம் வெளியிட்டிருந்தது. அதாவது மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வில் பங்கேற்க வேண்டும் எனில் 11 மற்றும் 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் ஆகிய பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும் என்கிற விதி ஒரு வாரத்திற்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இனி உயிரியல் படிக்காதவர்களும் எம்பிபிஎஸ் படிப்பில் சேரலாம் என மருத்துவ ஆணையம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மருத்துவ படிப்புக்கு தேவையான இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கூடுதல் பாடமாக படித்தவர்களும் இனி இளநிலை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று கூறியிருந்தது. நீட் தேர்வெழுத கூடுதலாக உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்ப பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அல்லது மாநில தேர்வு வாரியத்தின் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் கூறியிருந்தது. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவாதம் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரியின் படம் வைக்கப்பட்டிருப்பது புதிய சலசலப்பை கிளப்பியிருக்கிறது. இந்து மத புராணங்களில் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் தன்வந்திரி, தேவர்களின் மருத்துவர் என்றும், ஆயுர்வேதத்தின் கடவுள் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, “மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது. நவீன மருத்துவத்தை மறுதலிக்க முனைவது அறிவியலோடு விளையாடுவது மட்டுமல்ல.. மக்களின் உயிரோடு விளையாடுவது” என்று சாடியுள்ளார்.

மருத்துவர்கள் பலரும், “மருத்துவம் மதச்சார்பற்றது. நோயாளிகளை எந்த மருத்துவரும் மதங்களால் பாகுபடுத்தி பார்ப்பதில்லை. இப்படி இருக்கும்போது இந்து கடவுளின் உருவத்தை லோகோவாக வைப்பது என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் உயர்த்தி பிடிப்பதை போல இருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.