மாம்பலத்தில் மட்டும் மழை நீர் வடியாதது ஏன்?: மா.சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் மழை நின்ற பின்னர் சில மணி நேரங்களில் வெள்ள நீர் வடிந்துவிட்டது. இருப்பினும் மாம்பலம் பகுதியில் மட்டும் வெள்ளம் தற்போது வரை வடியவில்லை. இதற்கான காரணத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.

சென்னையை பொறுத்த அளவில் நேற்றிரவு 4 மணி நேரத்தில் சராசரியாக 6.7 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக கொளத்தூரில் 62.4 மி.மீ, அம்பத்தூரில் 54.3 மி.மீ அளவு மழை பதிவாகியிருந்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்தது. மழை மேலும் நீடிக்கும் என அச்சம் நிலைவியதால் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக களத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து கொளத்தூரில் அமைச்சர் சேகர்பாபு உட்பட திமுக நிர்வாகிகள் பலர் களமிறங்கினர். சென்னையின் மற்ற பகுதிகளில் மேயர் பிரியா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் நேரில் ஆய்வு செய்து தேங்கிய நீர் சரியான முறையில் வெளியேற்றப்படுவதை உறுதி செய்தனர். பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியிருந்தாலும், மழை நின்ற சில மணி நேரங்களில் மொத்த நீரும் வடிந்துவிட்டது. இருப்பினும் தென் சென்னையின் மாம்பலம் பகுதியில் சில இடங்களில் மழை நீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி நின்றது. இன்று காலை வரை மழை நீர் வெளியேறாததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-

கடந்த காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டாலே அடையாறு கரையோரம் இருக்கும் குடிசை பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருந்தார்கள். ஆனால் இப்போது அடையாறு ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டு இருக்கிறது. எனவே செம்பரம்பாக்கத்தில் இருந்து 6000 கன அடி நீர் திறக்கப்பட்ட போதிலும் கூட குடிசை பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் ஏற்பட்ட ஒரே ஒரு பாதிப்பு மாம்பலம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுதான். காரணம் மாம்பலம் கால்வாயில் செம்பரம்பாக்கத்தில் இருந்து வந்த உபரி நீர் அதிக அளவு பாய்ந்ததால் மாம்பலம் குடியிருப்பு பகுதியில் இருந்த மழை தண்ணீர் வெளியேறாமல் அங்கேயே தேங்கி நின்றது. எனவே செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை 4,000 கனஅடியாக குறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து தற்போது மாம்பலம் பகுதியில் இருக்கும் மழை நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கி இருக்கிறது. மழைநீர் வடிய வாய்ப்பில்லாத இடங்களில் மோட்டார் பம்பு வைத்து மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.