கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடி) வரை நிதி உதவி செய்திருக்கிறது. எனினும், ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனை கொண்டுவர ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
இந்தநிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா வந்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் முன்னிலையில் உரையாட விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, ‘2 ஆண்டுகளாக போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2-ம் உலக போருக்கு பின் மிக நீண்ட போரில் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்’ என்றார். மேலும், உக்ரைனுக்கு கூடுதல் நிதி உதவியையும் கோரினார். நாடாளுமன்றத்தில் பேசிய பிறகு, அதிபர் பைடன், சபாநாயகர் மைக் ஜான்சன் உள்பட முக்கிய எம்.பி.க்களை ஜெலன்ஸ்கி தனித்தனியே சந்தித்து பேசினார்.