தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைசர் கேஎன் நேரு நேற்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கேஎன் நேரு. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இவர் உள்ளார். இவருக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் ஒன்று தான் 2016ல் தேர்தல் நன்னடத்தை மீறிய வழக்காகும். அதாவது கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தேர்தல் நன்நடத்தை விதிமுறைகளை மீறி திமுக சார்பில் சென்ட்ரல் பஸ் நிலையம் அருகே பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரில் கன்டோன்மென்ட் அமைச்சர் கேஎன் நேரு, திருச்சியின் தற்போதைய மேயர் அன்பழகன் உள்பட திமுக நிர்வாகிகள் மீது மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதுதொடர்பாக வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் சார்பில் அமைச்சர் கேஎன் நேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அமைச்சர் கேஎன் நேரு, மேயர் அன்பழகன் உள்பட 4 பேர் நேற்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் III-ல் நீதிபதி கேஆர் பாலாஜி முன்பு ஆஜராகினர். இதையடுத்து நீதிபதி கேஆர் பாலாஜி வழக்கு விசாரணையை 2024 ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அமைச்சர் கேஎன் நேரு உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அமைச்சர் கேஎன் நேரு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து புறப்பட்டு சென்றார்.