ஜே.என்.1 வைரஸ் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“ஜே.என்.1 தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை; இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, அடையாறு, தரமணி 100 அடி சாலையில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு பருவ மழைக்கு பின்னரும், பெரிய அளவிலான மழை நோய் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் முதல்வர் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பருவ மழை தொடங்கியதுமே, குறிப்பாக அக்டோபர் திங்கள் 29 ஆம் தேதியில் இருந்து, வாரத்திற்கு 1,000 முகாம்கள் திட்டமிடப்பட்டு, 10 வாரங்களில் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடைபெற தொடங்கியது. இன்று 10-வது வாரமாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 23,315 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து, பொது மக்களை காக்க இந்த முகாம்கள் பயன் தந்துள்ளது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலின் பாதிப்புகளில் இருந்து பொது மக்களை காக்க, முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒரு வாரமாக நடைபெற்றது. அந்த வகையில் 13,482 முகாம்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அதிகனமழை பொழிவால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும், 17.12.2023 அன்று முதல் நேற்று வரை 6,635 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 43,432 மருத்துவ முகாம்கள் கடந்த 2 மாதங்களாக நடத்தப்பட்டு 21,79,991 பொது மக்கள் பயன் பெற்றுள்ளனர். மருத்துவத்துறை வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும். இவ்வளவு அதிகமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதன் விளைவாக பொதுமக்கள் மழைக்கால நோய் பாதிப்புகளில் இருந்து காக்கப்பட்டுள்ளனர். 6,635 முகாம்கள் பெருமழையினால் அதிகம் பாதிக்கப்பட்ட தென்மாநிலங்களில் நடத்தப்பட்டிருந்தாலும், அதிகம் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 2,516 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு 2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி, 4 ஆண்டுகளாக தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பல்வேறு உருமாற்றங்களைப் பெற்று தற்போது ஜேஎன்.1 என்கின்ற புதிய வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. இது குறிப்பாக தெற்காசிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் பரவிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த பரவல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை, ஆனால் சிங்கப்பூர் நாட்டில், கணக்கெடுக்கும் பணியினை தொடங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த ஜேஎன்.1 வைரஸ் பாதிப்புகள் மருத்துவனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தேவை ஏற்படாத வகையில் மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு National University of Singapore (NUS) அமைப்பை சேர்ந்த மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்துக் கொண்டிருக்கிறது. நமது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர், கேரள அரசின் பொது சுகாதாரத் துறையுடன் தொடர்பில் இருந்துக் கொண்டிருக்கிறார். மேலும், தமிழ்நாட்டில் ஜேஎன்.1 வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழ்நாட்டில் 45 பேரும், சென்னை மாவட்டத்தில் மட்டும் 25 பேரும், ஜேஎன்.1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு குழுவான (Cluster) பாதிப்புகள் பதிவாகவில்லை.

பொது சுகாதாரத் துறையின் சார்பாக பொதுமக்களுக்கு இணை நோய், நுரையீரல் பாதிப்பு, இதய நோய் பாதிப்பு, நாள்பட்ட நீரிழிவு நோய் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் தீவிர பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை, எனவே பொதுமக்கள் பெரிய அளவில் அச்சம்கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1,25,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் 200 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அளவினை தற்போது 2000 மெட்ரிக் டன் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பை பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டு 13,204 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு, 66 பேர் உயிரிழந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு 23,294, பாதிப்புகளும் 65 இறப்புகளும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 10,000க்கும் குறைவான பாதிப்புகளும், 10க்கும் குறைவான இறப்புகளும் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு ஒன்றிய அரசால் டெங்குவினால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் விளைவாக, டெங்கு பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 8,953 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த காலங்களில் ஏற்பட்ட சராசரி பாதிப்புகளை விட குறைவாகும். எனவே பொதுமக்கள் டெங்கு குறித்து பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.