உலகில் அனைவருக்கும் சொந்தமான கடவுள் ராமர்: பரூக் அப்துல்லா!

“கடவுள் ராமர், இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர்” என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், கலந்துகொள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் பங்கேற்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி உட்பட நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் கட்ட முயற்சி செய்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்ள விரும்புகிறேன். ராமர் கோயில் இப்போது தாயாராக உள்ளது. கடவுள் ராமர், இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர். அவர் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கடவுள்தான். இவ்வாறுதான் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அதைதான் நான் இந்த தேசத்துக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் போன்ற செய்திகளைதான் கடவுள் ராமர் வலியுறுத்துகிறார். இக்கோயில் திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், நம் நாட்டில் குறைந்து வரும் சகோதரத்துவத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு கூற விரும்புகிறேன். மேலும் சகோதரத்துவத்தைப் பேணி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.