ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 12.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக ஐரோப்பிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “ஜப்பானின் ஹொன்ஷுவின் மேற்குக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.5, 7.5, 6.2 ரிக்டர் என அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேற்குக் கடலோரம் உள்ள அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மட்டுமல்லாது தென் கொரியா, செர்பியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளபோது டெக்டானிக் தகடுகள் ஒன்றோடு மோதாமல் ஒன்றின் மீது ஒன்றாக எழுந்தால் சுனாமி அலைகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 5 முதல் 7 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் உடனடியாக கடற்கரையோரங்களில் இருந்து வெளியேறி மிக உயரமான கட்டிடங்களில் உச்சிக்கு சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடப்பட்டது. ஜப்பானின் இஷிகாவா, நிகாடா, டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. மக்களை உடடினாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் இறங்கினர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது. இதனால் ஜப்பான் மக்கள் கவலை அடைந்துள்ளனர். 5 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜப்பானின் அண்டை நாடான வடகொரியா மற்றும் ரஷ்யாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை ரஷ்ய அதிபர் மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. உடனடியாக கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடனர். ஜப்பானை ஒட்டியுள்ள ஷாக்லின் தீவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாக ரஷ்யாவின் அவசரகால சேவைகளுக்கான அமைச்சர் கூறினார்.
