திருச்சியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி!

திருச்சி அரியமங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி அரியமங்கலம் அருகே வசித்து வருபவர் மாரிமுத்து. ஆட்டோ டிரைவர். மாரிமுத்துவின் மனைவி விஜயலட்சுமி. மாரிமுத்துவுடன் அவரது தாயார் சாந்தியும் வசித்து வந்தார். மாரிமுத்துவுக்கு ஷரீனி என்ற 12 வயது மகளும் பிரதீபா என்ற 10 வயது மகளும் இருந்தனர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகள் பழமையான வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். இந்த நிலையில், இரவு திடீரென அவரது வீட்டின் மேற்கூரை அப்படியே முழுவதுமாக இடிந்து விழுந்தது. சிமெண்ட் காங்கிரீட் இடிந்ததில் கீழே தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது அப்படியே இடிபாடுகள் விழுந்தது. நள்ளிரவில் பெயர்ந்து விழுந்ததால், இந்த சம்பவம் வெளியில் யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில், விடிந்த பிறகு தான் அக்கம் பக்கத்தினர் பார்த்து தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் இடுபாடுகளை மீட்கும் பணி நடந்தது. இதில், மாரிமுத்துவின் தாயார் சாந்தி, மனைவி விஜயலட்சுமி மற்றும் மகள்கள் இருவரும் என 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

மழைக்காலம் என்பதால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அல்லது பழைய கட்டுமானமா எனபன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். புத்தாண்டு தினத்தை அப்பகுதி மக்கள் கொண்டாடி வரும் நிலையில், வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.