லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்கால் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாம் நாளான இன்று இப்போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் பரவலாக பல நகரங்களிலும் பெட்ரோல், டீசல் வாங்க கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. வாகன ஓட்டிகள் பீதியில் வாகனங்களில் எரிபொருளை முழுமையாக நிரப்பி வைக்க குவிந்த வண்ணம் உள்ளனர். லாரி வரத்து இல்லாததால் சில பங்க்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் நிலவுகிறது.

இதனால், மத்தியப் பிரதேசத்தில் பள்ளிப் பேருந்துகள் எரிபொருள் கிடைக்காமல் முடங்கும் சூழலுல் உருவாகியுள்ளதாக பள்ளி வாகன கூட்டமைப்பின் தலைவர் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இது தவிர ராஜஸ்தான்,பஞ்சாப், ஹரியாணா என பல மாநிலங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. பால் தொடங்கி கட்டுமானப் பொருட்கள் வரை பல பொருட்கள் விநியோகமும் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில லாரி ஓட்டுநர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹேப்பி சித்து, “இது ஒரு கருப்புச் சட்டம். இந்தச் சட்டம் பஞ்சாப் லாரி ஓட்டுநர்களை அழித்துவிடும்” என்று கருத்து தெரிவித்தார். மகாராஷ்டிராவின் லாரி ஓட்டுநர் சையத் வாஜித், “நாங்கள் ஓட்டுநர்கள். எங்களால் எப்படி இவ்வளவு பெரிய தொகையை அபராதமாகக் கொடுக்க முடியும்?” என்று வினவியுள்ளார்.

பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக மூன்று குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்தது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அகில இந்திய வாகன போக்குவரத்து சங்கம் வலியுறுத்தி வருகிறது.

“ஓட்டுநர் தரப்பினரிடம் கலந்தாலோசிக்காமல் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பக்கபலமாக இருப்பவர்கள். விநியோக சங்கிலியை தக்கவைப்பவர்கள். சாலை விதியின் முக்கியத்துவத்தை மதிக்கிறோம். ஆனால், ஓட்டுநர் வேலைக்கு புதிதாக யாரும் வரமாட்டார்கள். எனவே, புதிய சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று அச்சங்கம் வலியுறுத்தியது.

இந்நிலையில், மூன்று நாட்கள் போராட்ட அறிவிப்பும் வெளியானது. நேற்று ஜனவரி 1 தொடங்கிய இந்தப் போராட்டம் இரண்டாம் நாளான இன்று எதிர்பார்த்ததைவிட தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிராவில் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தை ஒட்டி மாநில அரசு காவல்துறைக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் போராட்டத்தை மட்டுப்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல், எல்பிஐ சிலிண்டர் மற்றும் உணவுப் பொருட்கள் தடையின்றி வருவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தால் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சிலிண்டர் நிரப்பும் மையங்களில் இருந்தே சரக்கு செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் லாரி ஓட்டுநர்கள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேடா, வல்சாட், கிர், சோம்நாத், பாருச் மற்றும் மேஷனா மாவட்டங்களின் வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேஷனா – அம்பாஜி நெடுஞ்சாலை, அகமதாபாத் – இந்தூர் நெடுஞ்சாலையில் டயர்களை எரித்து போக்குவரத்தை முடக்கினர். இதனால் அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலையில் 10 கிமீ தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போராட்டம் மெல்ல மெல்ல ராஜஸ்தானிலும் பரவத் தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தின் தோல்பூர் – கராலி, உதய்பூர் – நத்வாரா, மாதோபூர் – கோட்டா லால்சோட், பில்வாரா – ஆஜ்மீர், அனுப்கர் – கங்காநகர் மார்க்கங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கி கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இப்போது வரை, விபத்தை ஏற்படுத்திவிட்டு செல்வோர் மீது ஐபிசி (இந்திய தண்டனைச் சட்டம்) 304A கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. உயிர்ச் சேதம் ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம், இல்லையென்றால் இரண்டுமே என தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தத் தண்டனை 10 ஆண்டுகள் என்றும், அபராதம் ரூ.7 லட்சம் என்று உயர்த்தப்பட்டுள்ளதும்தான் தற்போது போராட்டத்தைத் தீவிரமடையச் செய்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் 150 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தபோது பேரரசர் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார். இந்தச் சட்டம் ஓட்டுநர்களுக்கு எதிரானது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் அவர்களுக்கு எதிரான இந்தச் சட்டம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மிகவும் கடினமாக உழைத்தும் குறைந்த வருவாயைக் கொண்ட இந்தத் தொழிலாளர்களைக் கடுமையான சட்டத்துக்கு உட்படுத்துவது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். மேலும், இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்கும் சூழலும் உருவாகும். பேரரசரின் உத்தரவுக்கும் நீதி உத்தரவுக்குமான வித்தியாசத்தை இந்த அரசாங்கம் மறந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.