ஈரானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 73 போ் பலி; 170 போ் படுகாயம்!

ஈரானில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 73 பேர் பலியாகியுள்ளனர். 170-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் காசிம் சுலைமானியின் நினைவு நாள் இன்று ஈரானில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது கல்லறை அருகே நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில் இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தில் காசிம் சுலைமானி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் அருகே இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பதாகவும் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமாா் 73 பேர் கொல்லப்பட்டனா். 170-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்துள்ளனா்.

காசிம் சுலைமானியின் கல்லறை அருகே இந்த பயங்கர குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் காயமடைந்தனர்.

ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைவராக இருந்தவா் ஜெனரல் காசிம் சுலைமானி. கடந்த 2020 ஆம் ஆண்டு பாக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் சுலைமான் கொல்லப்பட்டாா். அவரது இறப்பிற்கு பின்னர் ஈரானில் மரியாதைக்குரிய நபராக காசிம் சுலைமானி அறியப்படுகிறாா். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கை பிரிவான குத்ஸ் படையின் தலைவராகவும் அவா் செயல்பட்டுள்ளாா்.