அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்: ரஷ்யா எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதம், நிதி உதவி உள்ளிட்டவைகளை அளித்து வருகின்றன. இந்நிலையில் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த 2022 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டை கிட்டதட்ட இரண்டு ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான உயிர்சேதம் மற்றும் பொருளாதார இழப்புகளை இருநாடுகளும் சந்தித்துள்ளன. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவி அளித்து வருவதால் ரஷ்யாவை எதிர்த்து தீவிரமாக சண்டையிட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் டிமிட்ரி தலைவர் மெத்வதேவ் இது தொடர்பாக கூறும்போது, ” அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த நினைக்கிறது. இதை தற்காப்பாக கருத முடியாது. ஆனால், போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கான அடிப்படை விஷயமாக இது அமையும்” என்று கூறியுள்ளார்.