மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர்!

மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு விதித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் மாலத்தீவு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மாலத்தீவில் 88 இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில் மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று அதிபர் முய்சு கெடு விதித்துள்ளார்.

இதுகுறித்து மாலத்தீவு அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் அப்துல்லா நசீம் இப்ராகிம் கூறும்போது, ‘இந்திய வீரர்களை வெளியேற்றுவது தொடர்பாக இரு நாடுகளை சேர்ந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மார்ச் 15-க்குள் இந்திய வீரர்கள் வெளியேற அதிபர் முய்சு அறிவுறுத்தியுள்ளார்’ என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு சென்றார். இதுதொடர்பாக மாலத்தீவை சேர்ந்த அமைச்சர்கள், தலைவர்கள் எதிர்மறையாக விமர்சனம் செய்தனர். இதன்காரணமாக மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் முழுமையாக புறக்கணித்து உள்ளனர். இந்த விவகாரத்தால் இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது.

இந்திய வெளியுறவு துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2010 மற்றும் 2013-ம்ஆண்டுகளில் மாலத்தீவுக்கு இந்தியா சார்பில் 2 ஹெலிகாப்டர்கள் பரிசாக வழங்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டில் அந்த நாட்டுக்கு ஒரு விமானம் பரிசாக வழங்கப்பட்டது.

தேடுதல், மீட்புப் பணிகளுக்கு இந்த ஹெலிகாப்டர்கள், விமானம்பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் இயக்கம், பராமரிப்புக்காக இந்திய வீரர்கள் மாலத்தீவில் முகாமிட்டு உள்ளனர். இந்திய வீரர்கள் ராணுவ ரீதியிலான எந்த பணியிலும் ஈடுபடவில்லை. தற்போதைய அதிபர் முய்சு சீன ஆதரவாளர் என்பதால் இந்திய வீரர்களை வெளியேற்ற விரும்புகிறார். இதுதொடர்பாக மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும். இருநாடுகள் தரப்பில் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.