ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் திராவிட மாடல் அரசு: உதயநிதி

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நிலையில், இதில் அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சென்னை நேரு அரங்கில் நடைபெறுகிறது. சென்னையில் இந்த நிகழ்ச்சிகளை இதை பிரதமர் மோடி தொடங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வரவேற்புரை ஆற்றினார். பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை அமைச்சர் உதயநிதி வரவேற்றார். அப்போது முதல்வரை ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். அப்போது அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தமிழகம் நடத்த வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகி இருக்கிறது. 2021இல் திமுக ஆட்சிக்கு வந்தது முதலே சர்வதேச நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலகக் கோப்பை எனப் பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கிராமங்களுக்கு விளையாட்டு கிட்களை விரைவில் வழங்கவுள்ளோம். இப்போது 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்துகிறது செஸ் விளையாட்டில் தமிழக வீரர்கள் இந்திய அளவில் முன்னணியில் உள்ளனர்.

விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்பட ஊக்கம் அளித்து வரும் முதல்வருக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் தடகள வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளிக்க 76 பயிற்சியாளர்களைத் தேர்வு செய்துள்ளோம். தமிழகம் மிகப் பெரிய விளையாட்டு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வீரர்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி செய்து வருகிறது. மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித் தொகை மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்தி தமிழக அரசு வரலாறு படைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.