பாஜகவினரையே அதிர்ச்சியடையக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட இருக்கிறது. இதனால், இன்று இடைக்கால பட்ஜெட் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இன்று காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், பட்ஜெட்டில் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதும் இல்லை என்றும் பாஜகவினரையே அதிர்ச்சியடையக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-
பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதும் இல்லை. ஒரு வெற்று அறிக்கை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்கிற இருக்கும் நிலையில், அவர்கள் ஏதேனும் புதிதாக அறிவிப்பார்கள், புதிய திட்டங்களை அறிவிப்பார்கள் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. அனைவரையுமே ஏமாற்றக்கூடிய வகையில் இது இருந்தது. பாஜகவினரையே அதிர்ச்சியடையக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. பாஜக தடுமாறி போய் இருக்கிறது. தேர்தலை சந்திப்பதில் அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியிருப்பதை இது உணர்த்துகிறது. திமுக தலமையிலான கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து திமுகவின் டி.ஆர். பாலுவின் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில், இந்த பேச்சுவார்த்தையில் விசிகவும் பங்கு பெறும். 10க்கும் மேற்பட்ட கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி இந்தியா கூட்டணி, கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், அதற்கு பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி, கட்டுக்கோப்பாக ஒற்றுமையாக செயல்பட்டு, இயங்கி வருகிறது.
பாஜக – அதிமுக கூட்டணி ஒரு கொள்கை அற்ற கூட்டணி என்பதால் அது இடையிலேயே சிதறிவிட்டது. இன்னும் அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள், பாஜக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கூட அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. வழக்கம் போல் பாமக தனித்து தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு எந்த அணியில் சேரப்போகிறோம் என்பதை ஒரு சூசகமாக வைத்திருக்கிறார்கள். ஆகவே திமுக கூட்டணி ஒரு கட்டுக்கோப்பான கூட்டணி. தமிழக மக்களின் வெகுவான ஆதரவை மீண்டும் பெறும். 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.