“நாட்டின் செல்வ உற்பத்தியின் உயிர் நாடியான உழைக்கும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத நிதிநிலை அறிக்கை ராமர் கோயிலையும், அதனை சுற்றி கட்டமைக்கப்படும் அரசியல் வியூகத்தையும் வார்த்தை ஜாலங்களில் கட்டமைத்துள்ளது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கானல் நீர் காட்டி தாகம் தீர்க்க முயலும் நிதிநிலை அறிக்கை. நாட்டின் பதினேழாவது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25-க்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று (பிப்.1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாக மத்திய அரசு வழங்கிய சில உதவித் திட்டங்களை தொகுத்துக் கூறியுள்ள நிதியமைச்சர் நாடு 2027-ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த நாடாக உயரும் எனக் கூறுகிறார்.
கொரோனா நோய் பெருந்தொற்று தீவிரமாக பரவிய நிலையிலும் விவசாயிகளின் சாகுபடி நிலங்களை பறித்து, பெரும் குழும நிறுவனங்களுக்கு வழங்கும் வேளாண் வணிக சட்டங்களையும், மின்சார சட்ட திருத்த மசோதாவையும் எதிர்த்தும், விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய சட்டபூர்வ ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடினர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க, சிதைக்க, சிதறடிக்க மத்திய அரசும், பாஜகவும் சகல முயற்சிகளையும் மேற்கொண்டு தோற்றுப் போனது. இறுதியில் விவசாயிகளுக்கு உறுதிமொழி அளித்து வேளாண் வணிக சட்டங்களை திரும்பப் பெற்றது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதியை மறந்து, விவசாயிகளை வஞ்சித்து வருவதை நிதிநிலை அறிக்கையும் வெளிப்படுத்துகிறது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியும், மத்திய தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலும் அதன் கோரிக்கைகளை பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளாத நிதி நிலை அறிக்கை மத்திய அரசின் ஏதேச்சதிகார கார்ப்ரேட்டு ஆதரவுக் கொள்கையை உயர்த்தி பிடிக்கிறது.மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மேம்படுத்தி ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும், தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.700 நிர்ணயித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீதும் கவனம் செலுத்தவில்லை.
ஆனால் நேரடி வரி செலுத்தும் பிரிவுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரி குறைத்து, மேலும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுப்பதாக முழங்கும் நிதி நிலை அறிக்கை ஆறு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டிருப்பது குறித்து மவுனமாகிவிட்டது. நாட்டின் செல்வ உற்பத்தியின் உயிர் நாடியான உழைக்கும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத நிதிநிலை அறிக்கை ராமர் கோவிலையும், அதனை சுற்றி கட்டமைக்கப்படும் அரசியல் வியூகத்தையும் வார்த்தை ஜாலங்களில் கட்டமைத்துள்ளது.
கானல் நீர் காட்டி தாகம் தீர்க்கும் தண்ணீர் இருப்பதாக கூறும் இடைக்கால நிதிநிலை அறிக்கை வழக்கம் போல் ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கும், சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கும் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.