எந்த உருப்படியான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை: கே.பாலகிருஷ்ணன்!

“இந்தியாவில் கடன் உயர்ந்துள்ள நிலையிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்த உருப்படியான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான துறைகள், கல்வி, சுகாதாரம், பெண்கள் – குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம், பிரதமர் கிராம சாலை திட்டம் உள்ளிட்ட அனைத்துக்குமான கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவாக செலவழித்துவிட்டு அதன் காரணமாகவே நிதி பற்றாக்குறை குறைந்திருப்பதை பெரும் சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

இதைப் போல அனைத்து மக்களுக்குமான மானியங்களாக வழங்கும் உர மானியம், உணவு மானியம், எரிபொருள் மானியங்களையும் வெட்டிச் சுருக்கியிருக்கிறார்கள். வேலையின்மை கடந்த அக்டோபர், டிசம்பர் மாதத்தில் 20-24 வயதுக்கு உட்பட்டவருக்கு 44.5 சதவிகிதமாகவும், 25-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு 14.33 சதவிகிதமாகவும் இருக்கும் நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த திட்டமும் அறிவிப்பில் இல்லை. எந்த கணக்கீடும், தரவுகளுமின்றி 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டுவிட்டதாக பொய்யுரைத்திருக்கிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் மட்டும் மூன்றில் ஒருவர் கிராமப்புறத்தில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ. 26-ல் வாழ்க்கையை நடத்துவதற்கும், நகர்புறத்தில் ரூ. 32-ல் வாழ்க்கை நடத்துவதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில் இது எத்தனை மோசடி என்பது விளங்கும். இந்த நிலையிலும் வறுமை ஒழிப்புக்கு உருப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் இருப்பதை மறைப்பதற்காகவே 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டு விட்டதாக அறிவித்துக் கொள்கிறார்கள்.

இந்தியா வரலாறு காணாத வளர்ச்சியடைந்து விட்டது போல வெற்று முழக்கங்களையும், வாய்ச்சவாடல்களையும் தவிர இடைக்கால பட்ஜெட்டில் எதுவும் இல்லை. கடந்த காலத்தைப் போலவே இது ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், விவசாயத்துக்கும், பெண்களுக்கும் எதிரான பட்ஜெட்டாகும். புதிதாக எந்த முன்வைப்புகளும், திட்டங்களும் இல்லாத நிலையில் கடந்த காலத்தைப் போலவே பெருமுதலாளிகளுக்கும், அந்நிய மூலதனங்களுக்கும் அள்ளிக் கொடுக்கும் கொள்கை தொடரும் என்பதே இதன் பொருள்.

மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் புதிய வரி விதிப்புக்கான வாய்ப்புகளும், மாநில அரசுகளிடமிருந்து ஜிஎஸ்டி வந்த பிறகு பறிக்கப்பட்ட நிலையில் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு வெறும் 20 சதவிகிதம் மட்டுமே. சரியாகச் சொல்வது என்றால் மத்திய அரசு தான் வாங்கியுள்ள கடனுக்கு கட்டும் வட்டி அளவுக்குத் தான் மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்கிறார்கள். 200 லட்சம் கோடிக்கு மேல் இந்தியாவில் கடன் உயர்ந்துள்ள நிலையிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்த உருப்படியான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

இந்தியா முழுக்க சமூக நீதிக்கான குரல்களும், போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் தாங்களும் சமூக நீதிக்கு வாரி வழங்கியதைப் போல ஒரு பொய்யுரையை நிதியமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார். சமீபத்தில் கூட யுஜிசி, உயர்கல்வி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள பட்டியலினத்தவர், பழங்குடியினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடங்களை பொதுப் பணியிடங்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வந்ததும், இதற்கு முன்பும் இதுபோல நடந்ததும் அனைவருக்கும் தெரியும். இதேபோன்று, பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்று விட்டு, அரசு பணிகளுக்கும் ஆள் எடுக்காமல் இருக்கும் நிலையில் சமூக அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பகுதியினருக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்.

ஒட்டுமொத்தத்தில் ஏழை, எளிய, நடுத்தர, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மறுத்தும், அவர்களின் தலையில் சுமைகளை ஏற்றி, வாழ்வாதாரத்தை பறித்து வயிற்றில் அடித்துவிட்டு சாதனை பட்ஜெட் என்று தம்பட்டம் அடித்துள்ளனர். எனவே, வழக்கம் போல முழுமையான பட்ஜெட்டை போலவே இந்த பட்ஜெட்டும் இந்தியாவில் பெரும்பான்மை மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாகவும், பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் கொள்கைகளை உடையதாகவுமே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.