தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தடையை மீறி ஊர்வலம் சென்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜகவை பலப்படுத்தும் விதமாக அண்ணாமலை மக்களை சந்தித்து வருகிறார். அதிமுக இனி பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று தெரிவித்துள்ளதால் பாஜகவும் வரும் மக்களவை தேர்தலில் தனியாக ஒரு கூட்டணி அமைக்க ஆயத்தமாகி வருகிறது. தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தனது பாத யாத்திரையில் அண்ணாமலை தமிழகத்தில் ஆளும் திமுகவை மிகக் கடுமையாக அட்டாக் செய்து வருகிறார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தடையை மீறி ஊர்வலம் சென்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பத்தூர் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டார். அப்போது புதுப்பேட்டை கூட்டு ரோடு சாலையில், அவரது நடைபயணத்தின் போது கொடிக்கம்பம் கீழே விழுந்தது. இதில் கனில் என்பவர் படுகாயம் அடைந்தார். தொடந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இது தொடர்பாக பாஜக நிர்வாகி சண்முகம் என்பவர் மீது திருப்பத்தூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி திருப்பத்தூர் ஆம்பூர் பகுதியில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார். இதில் நேதாஜி ரோடு பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள முயன்றபோது, முன் நடந்த அசம்பாவிதம் ஏது நடந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அந்த பகுதி மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும், போலீசார் அண்ணாமலையின் ஊர்வலத்திற்கு அப்பகுதியில் தடை விதித்து இருந்தனர். ஆனால் அந்த தடையை மீறி பாஜகவினர் ஊர்வலம் மேற்கொள்வோம் என்று தெரிவித்து நடைபயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக அளித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.