தேசதுரோக செயல்களில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA என்.ஐ.ஏ.) கைது செய்ய இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் திடீரென நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி, இசை மதிவாணன் உள்ளிட்டோர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. என்.ஐ.ஏ. நடத்திய இந்த சோதனை முதலில், வெளிநாட்டு நிதி உதவி தொடர்பாக என கூறப்பட்டது. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க ஆயுதம் கடத்திய வழக்கில்தான் சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்தது. அதேநேரத்தில் என்.ஐ.ஏ. சோதனையில் ஒன்றுமே சிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பொதுக் கூட்டங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நீண்டகாலமாக நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை என்.ஐ.ஏ. தொடர்ந்து கண்காணித்து வந்தது. தமிழ்நாடு போலீசாரும் நாம் தமிழர் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்தே என்.ஐ.ஏ. அதிகாரிகள், கண்காணிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நாட்டுக்கு எதிராக செயல்பட்ட நாம் தமிழர் கட்சியினரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.