குடும்ப அரசியல் என்றால் உண்மையில் என்ன தெரியுமா: பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது காங்கிரஸை கடுமையாகச் சாடிய அவர், எது குடும்ப அரசியல் என்பது குறித்தும் பேசினார்.

கடந்த 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து மறுநாள் அதாவது பிப். 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வந்தது. இதில் பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இதற்கிடையே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம்.. அதில் எந்தவொரு தவறும் இல்லை.. ஆனால் ஒரே குடும்பம் கட்சி நடத்துவது தான் குடும்ப அரசியல்.. ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயல்வதால் தான் காங்கிரஸை இழுத்து மூடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. ஒரு சிலரின் முக்கியத்துவத்தைக் குறைக்கக் கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கான வாய்ப்பை மறுக்கிறார்கள். நாங்கள் பேசுவது எங்கள் சோதனைகளை இல்லை.. இந்த நாடு செய்த சாதனைகளைத் தான் நாங்கள் பேசுகிறோம். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும். அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.. இதுதான் மோடியின் கியாரண்டி.

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.. மீண்டும் இதே வரிசையில் தான் இருப்பீர்கள்! வந்தே பாரத், மேக் இன் இந்தியா, புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஆகியவை இந்த நாட்டின் சாதனை.. இந்தியா மட்டுமின்றி உலக நலனிற்காகவும் இந்தியா பாடுபடுகிறது. இதை ஜி20 மாநாடு உலகம் உலக தலைவர்கள் புரிந்து கொண்டனர். மத்திய பாஜக அரசு மிகப் பெரிய குறிக்கோள்களுடன் உழைத்து வருகிறது. எனவே, நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மதத்தின் அடிப்படையில் சமுதாயத்தை எதிர்க்கட்சிகள் பிளவுபடுத்துகிறது. இதை அவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்த நிலைக்குக் காங்கிரஸ் தான் முக்கிய காரணம்.. காங்கிரஸ் செயல்பாடுகளால் அக்கட்சிக்கு மட்டுமில்லை.. பிற கட்சிகளுக்கும் நாட்டுக்கும் கூட மிகப் பெரிய இழப்பு.. அரசின் அனைத்து நடவடிக்கைகளை எதிர்ப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். காங்கிரஸ் கட்சிக்கு முடிவுகாலம் வந்துவிட்டது. காங்கிரஸின் மந்தமான ஊர்ந்து செல்லும் ஆட்சிக்கு உலகில் யாருமே போட்டி இல்லை. பாஜக ஆட்சியில் சுமார் 4 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் போன்ற ஆட்சி இருந்து இருந்தால் நாங்கள் செய்த சாதனைகளைச் செய்ய 3 தலைமுறைகள் ஆகியிருக்கும்.

செங்கோட்டையில் இருந்து பிரதமர் நேரு பேசியதை நான் இங்குப் படிக்கிறேன். பொதுவாக இந்தியர்களுக்குக் கடினமாக உழைக்கும் பழக்கம் இல்லை. ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் போல இங்குள்ளவர்கள் உழைக்கவில்லை என்று கூறியிருந்தார். அதாவது இந்தியர்கள் சோம்பேறிகள் மற்றும் புத்திசாலித்தனம் குறைவாக உள்ளவர்கள் என்று நேரு நினைத்தார் என்பதே இதற்கு அர்த்தம்.. இந்திரா காந்தியின் சிந்தனையும் கூட நேருவிலிருந்து வேறுபட்டதல்ல.. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பேசியதையும் நான் இங்கு வாசித்துக் காட்டுகிறேன். சில சுப காரியங்களின் போது,​​​​ நாம் மனநிறைவு அடைகிறோம்.. ஆனால், எந்த சிரமம் வந்தாலும், நம்பிக்கையற்றவர்களாக மாறுகிறோம்.. சில சமயங்களில் ஒட்டுமொத்த தேசமும் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. தோல்வி உணர்வை ஏற்றுக்கொண்டது போல் தெரிகிறது என்று கூறியவர் தானே இந்தியா காந்தி.. அவரது பேச்சை இன்று நாம் பார்க்கும் போது ​​இந்திரா ஜி நாட்டு மக்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகத் தோன்றுகிறது. ஆனால் அவர் கூறியது காங்கிரசுக்குப் பொருத்தமாக இருக்கிறது.

இந்தியர்களைப் பற்றிய காங்கிரஸின் அரச குடும்பத்தின் சிந்தனை இதுவாகவே இருந்துள்ளது. ஆனால், இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் எனக்கு அபார நம்பிக்கை உள்ளது. மேலும், எதிர்க்கட்சி நிலைக்கும் காங்கிரஸ் தான் காரணம்.. காங்கிரஸ் தோல்வியடைந்தது மட்டுமின்றி, அவர்கள் மற்ற கட்சிகளையும் செயல்பட விடவில்லை. அவர்கள் பாராளுமன்றத்தையும் எதிர்க்கட்சியையும் நாட்டையும் சீரழித்துள்ளனர். நாட்டிற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை என்று நான் நம்புகிறேன். ஆனால், அங்கும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.