சட்லஜ் ஆற்றில் விழுந்த கார்: சைதை துரைசாமி மகன் மாயம்!

சட்லஜ் ஆற்றில் கார் மூழ்கியதால் தனது மகன் வெற்றி மாயமானதை அடுத்து இமாச்சல் பிரதேசத்திற்கு தந்தையும் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி விரைந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் விசுவாசி சைதை துரைசாமி. அவர் காலத்தில் அதிமுகவில் பயணித்த நிலையில் எம்ஜிஆர் மறைந்த நிலையில் அரசியலில் இருந்து விலகியிருந்தார். இதையடுத்து 2011 ஆம் ஆண்டு அவருக்கு ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார். ஆனால் அவரால் வெல்ல முடியவில்லை. இதையடுத்து அவருக்கு அதே ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக அறிவித்தார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் சைதை துரைசாமி வெற்றி பெற்றார். இதையடுத்து 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சென்னை மேயராக பதவி வகித்தார் சைதை துரைசாமி. அவருக்கு மனைவி மல்லிகாவும் மகன் வெற்றியும் உள்ளனர். மகன் வெற்றி சினிமா இயக்குநராக உள்ளார். ஏற்கெனவே ஒரு படத்தை இயக்கிய நிலையில் தற்போது மற்றொரு படத்தை இயக்குகிறார். இதற்காக வெற்றி தனது உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத்துடன் இமாச்சல் பிரதேசத்திற்கு சென்றார். அங்கு கஷாங் லா எனும் பகுதியில் உள்ள சட்லஜ் ஆற்றங்கரை அருகே லொகேஷன் பார்க்க ஒரு வாடகை காரில் கோபிநாத்துடன் வெற்றி சென்றார். காரை அதே பகுதியை சேர்ந்த டென்சின் என்பவர் இயக்கினார்.

சட்லஜ் ஆற்றின் மேல் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. இதையடுத்து காரின் சக்கரங்கள் நீரில் இருந்து வெளியே தெரிந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் பதறி அடித்துக் கொண்டு போலீஸில் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த காரை மீட்ட போது அதில் ஓட்டுநர் டென்சின் சடலமாக கிடைத்தார். கார் விழுந்த வேகத்தில் கீழே விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றியின் நிலை என்ன என்பதுதான் தெரியவில்லை. அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. அவ்வப்போது பனிப்பொழிவு இருப்பதால் தொய்வும் ஏற்படுகிறது. இந்த நிலையில் மகனின் நிலையை அறிய இமாச்சலுக்கு சைதை துரைசாமி விரைந்துள்ளார்.