வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் வரும் பிப்ரவரி 9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில் “பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் மனுதாரர்கள் செலவு செய்துள்ளனர். எம்எல்ஏ மகன் என்பதால், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த விவகாரத்தில் போலீஸார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர்” என்று வாதிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், “எஸ்.சி., எஸ்.டி பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை டிஎஸ்பி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில், ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரியவரும். வீட்டு பணியாட்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சட்டம் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. எனவே, போக்சோ பிரிவிலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர்” என வாதிடப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று செவ்வாயக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.